இந்தியாவின் முதல் கொரோனா நோய் பெண்ணுக்கு மீண்டும் தொற்று- மருத்துவர் வெளியிட்ட தகவல்!

இந்தியாவில், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் சீனாவில் வூகான் மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சீனாவில் இருந்து கேரளா வந்த அவருக்குத்தான் முதன் முதலாக கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், அந்த மாணவிக்கு திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.

இதனிடையே, அந்த மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள திருச்சூர் மாவட்ட மருத்துவ அலுவலர் கே.ஜே.ரீனா, அந்த மாணவி டெல்லிக்கு சென்று படிப்பதற்காக திட்டமிட்டிருந்தார்.

அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இப்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது மாணவி உடல் நலத்தோடு உள்ளார் என அவர் கூறியுள்ளார்.