சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நகைக்கடையான சரவணா ஸ்டோர் மீது போலி நகைக் கொடுத்து ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐயப்பன் தாங்கல், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் திரிவேணி(37). மருத்துவரான இவர் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தபால் மூலம் ஒரு புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், “தான் 2015-ம் ஆண்டு தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல் வாங்கியதாகவும், அதேபோல 2016-ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு வாங்கிய தங்கச் செயினானது கடந்த 2019ஆம் ஆண்டு அறுந்து விழுந்ததாகவும் அறுந்து விழுந்த செயினை எடுத்து பார்த்தபோது அதனுள் வெள்ளி கம்பிகள் இருந்ததாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “இதுகுறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும் போது இது தெரியாமல் நடந்திருக்கலாம் எனவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டு வேறு நகைகளை மாற்றி கொடுத்ததாகவும்” புகாரில் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் திரிவேணி. மேலும், அதனால் காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் நகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனதாகவும் அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைக்கப்பட்டு தங்களை ஏமாற்றியதாகவும், தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும் தங்களை ஏமாற்றியது போல்,
பல வாடிக்கையாளர்களை இதேபோல் போலியாக தங்க நகை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம்? எனவும் இதனால் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
மருத்துவர் திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் மாம்பலம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி வழக்கை விசாரித்த போது, சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மருத்துவர் திரிவேணியை இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது.
இதனடிப்படையில் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது மாம்பலம் போலீசார் மோசடி செய்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.