தொடர் சரிவில் தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் நிலையில் முதலீட்டாளர்களுக்கும் சேமிப்பு மற்றும் திருமணத்திற்காக நகை வாங்குவோருக்கும் இது ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

உலகிலேயே தங்கம் அதிகமாக வாங்கப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 849 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இது பெரும்பாலும் அந்த ஆண்டே விற்பனையாகி விடுகிறது. இந்திய மக்களிடையே சேமிப்பிற்கான முக்கிய பொருளாக பார்க்கப்படுவது தங்கம். அதிலும் முக்கியமாக தென்னிந்திய மக்கள்தான் இந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பெரும் நகைக் கடை விற்பனையாளர்களும் தங்களது கிளைகளை தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்கின்றன.

நாட்டில் நடைபெறும் மொத்த தங்க நகை வியாபாரங்களில் 40 சதவீதம் தென்னிந்தியாவில் தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையில் தான் அதிகமாக தங்க நகை ஆபரணங்கள் விற்பனையாகின்றன. இதற்கு தென்னிந்திய மக்கள் தங்கத்தை ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடாக பார்ப்பதே முக்கிய காரணம் எனலாம்.

பொதுவாகவே அவசர காலத்தின் நிதித் தேவைகளுக்கும் வங்கிகளில் அடகு வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தங்க ஆபரணங்கள் உதவுகின்றன. இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கும் சேமிப்பு மற்றும் திருமணத்திற்காக நகை வாங்குவோருக்கும் இது ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 49 குறைந்து 4,391 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூபாய் 392 குறைந்து 35,128 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை 968 ரூபாய் குறைந்திருக்கிறது.இது நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரும்பாலான மக்கள் முதலீட்டிற்கும் சேமிப்பிற்கும் தேர்வு செய்வது தங்கத்தையே. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக தங்கத்தின் விலை, கடந்த வருடம் ஊரடங்கின் போது வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஆகஸ்டு மாதத்தில், ஒரு சவரன் 43,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. குறைந்தபட்சமாக ஏப்ரல் மாதத்தின் போது 33,800 ரூபாய்க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை கடந்த 20 வருடங்களில் கணிசமாக உயர்ந்துள்ளதுடன் கடந்த 2002-ம் ஆண்டு ஒரு கிராம் 404 ரூபாய்க்கு விற்ற தங்கம், 2020-ம் ஆண்டில் கடுமையாக விலையேற்றம் கண்டு 4,959 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.