சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ‘பேஸ்புக்’கின் பெயர் மாற்றப்பட்டு “மெட்டா (Meta)” என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
‘சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம்; கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது’ என அவர் கூட்டத்தில் பேசி உள்ளார்.
அதே சமயம் தங்கள் ‘ஆப்’களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து சமீபத்தில் 10 ஆயிரம் பேர்களை, மெட்டாவெர்ஸ் பணிக்கு அமர்த்த இருப்பதாக பேஸ்புக் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.