பிரித்தானியாவில் நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருந்த இலங்கை தமிழ் குடும்பம்! தற்போது ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழரும் அவரின் குடும்பத்தாரும் நாடு கடத்தப்படும் சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அவர்களை உள்துறை அலுவலகம் பிரித்தானியாவிலேயே இருக்க அனுமதித்து அவர்களின் புகலிட கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது.

டாக்டர் நடராஜா முகுந்தன் ( Nadarajah Muhunthan) (47) தனது மனைவி சர்மிளா (Sharmila) (42) மற்றும் 13, 9, 5 வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் பிரித்தானியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறார்.

நடராஜா ஒரு விஞ்ஞானி ஆவார், அவர் சூரிய ஆற்றலை உருவாக்கப் பயன்படும் மெல்லிய ஒளிமின்னழுத்த சாதனங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு மதிப்புமிக்க காமன்வெல்த் ரூதர்ஃபோர்ட் பெல்லோஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது அவரை இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்துக்கு வந்து தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து மேம்படுத்த அனுமதித்தது.

அவர் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். நடராஜா மனைவி சர்மிளா முதியோர் இல்லத்தில் முதியோர்களை கவனிக்கும் பணியை செய்து வருகிறார்.

தம்பதியரின் மூத்த மகள் கிஹானியா (Gihaniya) பிரித்தானிய பள்ளியில் 100 சதவீத வருகை பதிவேட்டுடன் சிறந்த மாணவியாக திகழ்கிறார். குறிப்பாக அறிவியலில் அவர் செய்த சாதனைகளுக்காக பாராட்டப்பட்டுள்ளார்.

வருங்காலத்தில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதே கிஹானியாவின் விருப்பமாக உள்ளது. இந்த நிலையில் தான் நடராஜா குடும்பத்தாரை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானிய உள்துறை முடிவு செய்தது. ஆனால் திடீர் திருப்பமாக உள்துறை அலுவலகம் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு இப்போது நடராஜா மற்றும் அவரது குடும்பத்திற்கும் அகதி அந்தஸ்தை வழங்கியுள்ளது.

உள்துறை அலுவலகத்தின் இந்த முடிவிற்கு நடராஜா நன்றி தெரிவித்துள்ளார். இப்போது நான் பயமின்றி என் ஆராய்ச்சியைத் தொடர முடியும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 2019 நவம்பரில் நடராஜா தனது நோய்வாய்ப்பட்ட தாயாரை காண இலங்கைக்கு சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பி நடராஜா பிரித்தானியாவுக்கு திரும்பினார்.

நடராஜாவுக்கான உதவித்தொகை பிப்ரவரி 2020 இல் காலாவதியான பிறகு, அவரும் அவரது மனைவியும் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடராஜா குடும்பத்தாரின் வழக்கறிஞர் நாகா கந்தையா கூறுகையில், உள்துறை அலுவலகத்தின் மனமாற்றத்தை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.