10 நிமிடங்கள் ஸ்தம்பித்துப் போன இதயம்… 7 வயது சிறுமிக்கு நடந்த சிலிர்க்க வைக்கும் சம்பவம்

அவுஸ்திரேலியாவில் விபத்து ஒன்றில் சிக்கி நீண்ட 10 நிமிடங்கள் இதயம் ஸ்தம்பித்துப் போன 7 வயது சிறுமியை தாயார் ஒருவர் சமயோசிதமாக காப்பாற்றியுள்ளார்.

பிரிஸ்பேன் பகுதியில் நண்பரின் குடியிருப்புக்கு சென்றுள்ளார் 7 வயதான லீனா அலி. இந்த நிலையில் சம வயது நண்பர்கள் அனைவரும் நீச்சல் குளத்தில் பொழுதைக் கழித்து வந்தபோது, திடீரென்று சிறுமி லீனா அலி, அந்த நீச்சல் குளத்தின் அடிமட்டத்திற்கு மூழ்கியுள்ளார்.

இதை தற்செயலாக கவனித்த தாயார் ஒருவர், துரிதமாக செயல்பட்டு, லீனாவை மீட்டு கரைக்கு கொண்டுவந்தார். இந்த நேரம், எஞ்சியவர்கள் அவசர மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், பேச்சு மூச்சின்றி காணப்படும் சிறுமிக்கு CPR அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தகவல் அறிந்தது அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவிக்கையில், முடிந்த அளவு வேகமாக வர முயற்சி செய்வதாகவும், சிறுமியை படுக்க வைத்து, மார்பில் 30 முறை லேசாக அழுத்தவும், இருமுறை வாய்வழியாக மூச்சினை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை கவனத்தில் கொண்ட ஜாமி என்ற தாயார், துரிதமாக செயல்பட்டு, சிறுமி லீனாவுக்கு CPR அளித்துள்ளார். இதனிடையே, தகவல் கிடைத்த 7 நிமிடங்களில் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

தொடர்ந்து அவர்கள் முன்னெடுத்த தீவிர முயற்சியால் சிறுமியின் நின்று போன இதயம் 10 நிமிடங்களுக்கு பிறகு செயல்படத் தொடங்கியது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி லீனா, அங்கே நான்கு நாட்கள் சுயநினைவின்றி படுத்திருந்தார்.

மரணத்திற்கு மிக நெருக்கமாக சென்று திரும்பிய சிறுமி லீனா, பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய பின்னர், தமக்கு CPR அளித்து உயிர் பிழைக்க வைத்த ஜாமி என்ற அந்த தாயாரை ஆரத்தழுவி நன்றி தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, ஆபத்தான தருணத்தில் விரைந்து வந்து சேவையாற்றிய அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கும் சிறுமி லீனா நன்றி தெரிவித்துள்ளார். சிறுமி லீனாவுக்கு ஏற்பட்ட அந்த திடீர் உடல்நலக் கோளாறானது நூற்றில் ஒருவருக்கு தான் பிழைக்கும் வாய்ப்பு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.