ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்ற மாணவர், போலீசார் வாகனச் சோதனை மேற்கொண்டபோது, இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் ஓடிச் சென்றுள்ளார். இதனால், மணிகண்டனை பிடித்து, கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார். பிறகு, வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்தார்.
காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலே இதற்கு காரணம் என்று கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உயர் அதிகாரி உறவினர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.
இதனையடுத்து, அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மணிகண்டனின் உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், 1 கோடி ரூபாய் இழப்பீடு தருமாறு வலியுறுத்திய உறவினர்கள், உடலை வாங்காமல் ஊர் திரும்பினார்கள். இதையடுத்து மணிகணிடனின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.