முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை குறைந்த வினாடியில் வரிசைப்படுத்தி, 18 வயது வாலிபர் நிகழ்த்திய கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி கோதை வாஹ்ருணி. சென்னையை சேர்ந்த தம்பதி கௌசல்யா – பிரபு. இவர்களுடைய மகள் கோதை வாஹ்ருணி. 1ம் வகுப்பு படித்து வருகிறார்.
சின்ன வயது முதலே கதைகள் கேட்பது, புதிர் போடுவதை அதை விடுவிப்பது, கணிதம் உள்ளிட்டவற்றில் மிகவும் ஆர்வமாக இருந்து வந்துள்ளார். அம்மா, அப்பா மூலம் அறிமுகமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை தனது ஆர்வத்தால் யூடியூபில் கற்றுத் தேர்ந்த சிறுமி இன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மேலும், மாஸ்டர்மார்பிக்ஸ் எனப்படும் மிகக்கடினமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை ஹூலா ஹூபிங் செய்துகொண்டே 1 நிமிடம் 59 நொடிக்குள்ளும், மெகாமின்க்ஸ் எனப்படும் 8 பக்கம் கொண்ட கனசதுரத்தை 3.3 நிமிடத்தில் செய்துமுடித்து மேலும் 2 உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
இவரது திறமையை அங்கீகரிக்குக் விதமாக தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கமும், சான்றிதழும் வழங்கி சிறுமியை கௌரவித்திருக்கிறது.
பல கோணங்கள், பல வண்ணங்களில் இருக்கும் ரூபிக் கனசதுரத்தை தனது மாயஜால விரல்களால் அசால்டாக வரிசைப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் கோதை.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஹூலா ஹூபிங் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டே டெட்ராஹெட்ரான் எனப்படும் முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை 6.88 நொடிக்குள் வரிசைப்படுத்தி கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார்.
18 வயது வாலிபர் 13.86 நொடியில் நிகழ்த்திய சாதனையை கோதை 6.88 நொடியில் செய்து காண்பித்து சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.