பரீட்சையில் தோல்வியால் மாணவி தற்கொலை – போலீசிடம் சிக்கிய உருக்கமான கடிதம்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதி வைத்து விட்டுச் சென்ற உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியைச் சேர்ந்தவர் ஜெயா (18). இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிப்பை முடித்த ஜெயா மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

கடந்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகினது. அந்த முடிவில் மாணவி ஜெயா 69 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனால், மன உளைச்சலில் ஜெயா இருந்து வந்தார்.

இதனால், ஜெயாவை பெற்றோர் திருப்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். திருப்பூரில் சில வாரங்கள் இருந்த ஜெயா, தனது பெற்றோரையும் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லி மீண்டும் பாரதி நகருக்கு வந்தார்.

கடந்த 17ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து இறந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிறகு, அவரை மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில், மாணவி எழுதிய உருக்கமான கடிதம் போலீசிடம் சிக்கியுள்ளது.

அந்த கடிதத்தில், ‘நீட் தேர்வில் என்னால் வெற்றி பெற முடியவில்லை . அதனால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை . தற்கொலை செய்ய வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். அம்மா என்னை மீண்டும் மன்னித்துவிடு’ என்று உருக்கமுடன் எழுதியுள்ளார்.