திருமணமான ஒரு மாதத்தில் மனைவியை கனடாவுக்கு அனுப்பி வைத்த கணவன்! பின் ஏமாந்து நொந்து நூலான பரிதாபம்

திருமணமான ஒரு மாதத்தில் பல லட்சங்கள் செலவு செய்து மனைவியை கனடாவுக்கு கணவன் அனுப்பிய நிலையில், அங்கு சென்றதும் கணவரின் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து மனைவி செய்த மோசடி அம்பலமாகியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் சரண் ப்ரீத் சிங் (25). இவர் பொலிசில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு புகார் கொடுத்தார். இது தொடர்பில் பொலிசார் உண்மை தன்மையை அறிய விசாரணை நடத்திய பின்னர் சில தினங்களுக்கு முன்னர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: சரணுக்கு கனடாவில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஆனால் கனடா PR விசாவிற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற தேவையான IELTS மதிப்பெண்களை அவரால் பெற முடியவில்லை.

இந்த நிலையில் திருமண தரகர் மூலம் லவ்ப்ரீத் என்ற பெண்ணின் வரன் சரணுக்கு வந்தது. அதன்படி, லவ்ப்ரீத்துக்கு கனடாவுக்கு செல்வதற்கு தேவையான IELTS மதிப்பெண்கள் இருக்கிறது எனவும் ஆனால் வெளிநாட்டுக்கு செல்லும் அளவுக்கு பண வசதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருமண செலவுகள் மற்றும் கனடாவுக்கு லவ்ப்ரீத்தை அனுப்பும் செலவுகளை ஏற்க சரண் மற்றும் குடும்பத்தார் ஒப்பு கொண்டனர். ஏனெனில் கனடா சென்றடைந்த பிறகு, சரணை, லவ்ப்ரீத் spouse விசாவில் அங்கு அழைத்து கொள்ள வேண்டும் என சரண் குடும்பத்தார், லவ்ப்ரீத்திடம் தெரிவித்தனர்.

இதற்கு அவர் சம்மதித்த நிலையில் கடந்த 2018 ஜூலை மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. அதற்கு அடுத்த மாதமே லட்சங்களில் செலவு செய்து லவ்ப்ரீத்தை சரண் கனடாவுக்கு அனுப்பி வைத்தார். மொத்தமாக அவர் திருமணம் மற்றும் கனடாவுக்கு அனுப்பி வைக்க ரூ 40 லட்சம் செலவு செய்திருக்கிறார்.

ஆனால் கனடா சென்ற பிறகு லவ்ப்ரீத் தனது கணவரை அங்கு அழைத்து கொள்ள எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை. மேலும் ஒரு கட்டத்தில் சரண் போன் செய்தாலும் அவருடன் பேசாமல் தொடர்பை துண்டித்தார்.

இந்த நிலையில் தான் தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த அதிர்ச்சியடைந்த சரண் பொலிசில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.