திருமணம் முடிந்த கையோடு துப்பாக்கியுடன் போருக்கு தயரான உக்ரைன் தம்பதி!

உக்ரைன் தலைநகர் கிவ்வில் போருக்கு மத்தியில் ஒரு தம்பதியினர் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 24 வயதான ஸ்வயடோஸ்லாவ் பர்சின், 21 வயதான யரினா எரிவா என்ற இருவரும் எதிர்வரும் மே மாதம் தலைநகர் கிவ்வில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர் ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் நேற்றைய தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை அறிவித்தார். இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் உக்கிரமாக தாக்குதல் நடந்து வருகிறது.

இதேவேளை, அமைதியான நதி, அழகான விளக்குகள், உணவகத்தின் மேல்தளம் என்று அமைதியான முறையில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த பர்சின், யரினா தம்பதி தற்போது போருக்கு நடுவே வான்வழி தாக்குதல்களுக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே கிவ்வில் உள்ள ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இருவரும் நாட்டைப் பாதுகாக்கும் முயற்சிகளில் சேர உள்ளூர் பிராந்திய பாதுகாப்பு மையத்திற்குச் செல்லத் தயாராகியுள்ளனர்.

எனவேதான் இவர்கள் அவசர அவசரமாக தற்போது திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பாக யரினா, நிச்சயம் ஒருநாள் தாக்குதலின் பயத்திலிருந்து விடுபட்டு எங்கள் திருமணத்தை கொண்டாட முடியும் என்று கூறினார்.

உக்ரைனின் புதுத்தம்பதியான இவர்கள், தற்போது கையில் துப்பாக்கி ஏந்தி ரஷ்ய படைகளுக்கு எதிராக தாக்குதல் கொடுக்க தயாராகிவிட்டனர். அவர்களது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.