“பிளான் பண்ணாம பண்ணா இப்படி தான்” – 47 சவரன் நகையை திருடிய ஊழியப்பெண் வசமாக சிக்கியது எப்படி?

நகைக்கடையில் 47 சவரன் நகையை அலேக்காக திருடிய இளம்பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகே ராமசந்திரன் என்பவருக்கு சொந்தமான பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

பணகுடி இராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த சுபா என்ற 22 வயதான இளம்பெண் ஒருவர் இந்த நகைக்கடையில் நகை விற்பனையாளராக கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறார்.

நகைக்கடையின் உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து அவரால் நகைக்கடைக்கு சரிவர வரமுடியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி கடைக்குச் சென்று நகைகளை ஆய்வு செய்தபோது, 47 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ராமசந்திரன்.

உடனே கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது, அதில் விற்பனையாளராக பணி புரியும் சுபா நகைகளை திருடியது தெரியவந்தது.

நகைகளை திருடிய சுபா தனது தாயார் விஜயலெட்சுமியிடம் கொடுத்தது அம்பலமானது.

இது குறித்து ராமசந்திரன் வள்ளியூர் காவல் உதவி கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து ஏ.எஸ்.பி. உத்தரவின் பேரில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் கடந்த 4 நாட்களாக நகைக்கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி மானிட்டர் பழுதாகி இருந்ததால் மானிட்டரை சர்வீஸ் சென்டருக்கு பழுது நீக்குவதற்காக அனுப்பியுள்ளனர்.

மானிட்டர் இல்லாததால் சிசிடிவி-யில் பதிவாகாது என தப்பு கணக்குப்போட்ட சுபா தைரியமாக நகைகளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து வள்ளியூர் போலீசார் சுபாவையும், அவரது தாயார் விஜயலெட்சுமியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.