மத்தியபிரதேச மாநிலம், நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பப்லு ஜாலா. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளான நிலையில் கடந்த ஆண்டு லட்சுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பெண் குழந்தை பிறந்ததிலிருந்து பப்லுவுக்கும், அவரின் வீட்டாருக்கும் பிடிக்கவே இல்லை.
குழந்தை பிறந்ததிலிருந்தே பப்லு லட்சுமியை திட்டிக்கொண்டே இருப்பார். குழந்தையைப் பார்த்து எரிச்சலடைந்து வந்துள்ளார். அடிக்கடி லட்சுமியை அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளார் பப்லு.
கணவர் மட்டுமல்லாமல், பப்லுவின் தந்தையும், தாயும் லட்சுமியை கொடுமை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், ஏன் பெண் குழந்தை பெற்றாய் என்று லட்சுமியின் கை மற்றும் கால்களில் பப்லு மற்றும் அவரது குடும்பத்தார் சேர்ந்து இரும்பு கம்பியால் லட்சுமிக்கு சூடு வைத்துள்ளனர்.
இவர்கள் செய்யும் கொடுமையைப் பார்த்து அக்கம், பக்கத்தினர் லட்சுமியின் உறவினர்களுக்கு தெரியவைத்தனர். உடனடியாக பப்லு வீட்டிற்கு விரைந்து வந்த லட்சுமியின் பெற்றோரும், உறவினர்களும் அவர்களிடமிருந்து லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
பின்னர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பப்லு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் நானும் என் குடும்பமும் சேர்ந்து லட்சுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தினோம் என்று கூறினார். இதனையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.