மூன்று கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த பெண் பத்திரிக்கையாளர்! அதிர்ச்சி தரும் வார்த்தைகள்

கேரளாவில் மூன்று உருக்கமான கடிதங்களை எழுதி வைத்துவிட்டு பெண் பத்திரிக்கையாளர் தற்கொலை செய்த வழக்கில் பொலிசார் அவர் கணவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், ஸ்ருதி நாராயணன் என்ற பெண்ணுக்கும் கேரளாவின் காளிபரம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, கணவன் மனைவி இருவரும், பெங்களூரில் வசித்து வந்துள்ளனர். அனீஸ் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஸ்ருதி கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த சமயத்தில், அனீஸ் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனிடையே, பெங்களூரில் வசிக்கும் பெண்ணின் சகோதரரான நிஷாந்த் என்பவர், சகோதரிக்கு தொடர்ந்து போனில் அழைத்துள்ளார்.

அப்போது ஸ்ருதி போனை எடுக்கவில்லை. அதே போல, அவரின் போன், ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் தங்கி இருந்த அபார்ட்மெண்ட் சென்று பார்த்த போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

உடனடியாக, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில், இறந்து கிடந்துள்ளார் அந்த பெண். ஸ்ருதி தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்று நடைபெற்ற பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய மூன்று தற்கொலை கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறேன். இதனால் இரண்டு பேருக்கு மகிழ்ச்சி. ஒன்று நீ, மற்றொன்று நான் என்று ஆங்கில ஊடகத்தில் பணியாற்றி வந்த சுருதி நாராயணன் (37) தனது கணவருக்கு எழுதிய தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு மகிழ்ச்சிதான், ஏனென்றால் உன் கொடுமையிலிருந்து நான் தப்பிவிடுவேன், உனக்கும் மகிழ்ச்சிதான், ஏனென்றால் உன் வாழ்க்கையில் இனி நான் இருக்க மாட்டேன் என்று மார்ச் 20ஆம் திகதி ஞாயிறன்று எழுதிய தற்கொலைக் கடிதம் விவரிக்கிறது.

கணவருக்கு எழுதிய தற்கொலைக் கடிதத்தில், 20 நிமிடத்துக்கு மேல் யார் ஒருவராலும் உன்னுடைய கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு வேளை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், காது கேட்காத, கண் தெரியாத பெண்ணை திருமணம் செய்து கொள். அப்போதுதான் நீ என்ன பேசுகிறாய், செய்கிறாய் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டிருப்பதாக சகோதரர் நிஷாந்த் கூறினார்.

பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், நான் வாழ்ந்து கொண்டிருந்தால், அது உங்களுக்கு ஒவ்வொரு நாளையும் துக்கமாக மாற்றிவிடும். அதுவே நான் இறந்துவிட்டால் ஒரு சில நாள்களில் துக்கம் போய்விடும் என்று ஸ்ருதி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் பொலிசார் அனீஷ் மீது குடும்ப வன்முறை 498 (A) மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் 306 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள அனீஷை கேரளா மற்றும் கர்நாடகா என இரு மாநிலத்திலும் பொலிசார் தேடி வருகின்றனர். அனிஷ் மீது இறந்தவரின் உறவினர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

அவர் சிக்கிய பின்னரே எந்தவொடு முடிவுக்கும் வர முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.