சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை ஆலந்தூர் மடுவின்கரையில் வெல்டிங் வேலை பார்த்து வருபவர் ஜனார்த்தனன். இவரது 16 வயது மகன் விஷ்வா தனியார் பள்ளி ஒன்றில் +1 படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி சிறப்பு வகுப்பு முடித்து வீடு திரும்பிய விஷ்வா, படுக்கையறைக்கு சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது பாட்டி, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்துள்ளார். அப்போது விஷ்வா மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பரங்கிமலை பொலிஸார், மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விஷ்வா பள்ளி முடிந்து வரும்போது தன்னுடைய நண்பரிடம் நாளையில் இருந்து நான் பள்ளிக்கு வரமாட்டேன் என்று கூறியது தெரிய வந்துள்ளது. மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.