தமிழகத்தில் 4 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த விவகாரத்தில் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாக்குமரியின் காட்டாத்துறை பாலவிளையைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (37). இவருடைய மனைவி ஷிஜிமோள் (31). இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணமானது.
12, 9 வயதில் மகன்களும், 4½ வயதில் சுஷ்விகா மோள் என்ற மகளும் இருந்தனர். சுரேந்திரன் தினமும் மதுகுடித்து விட்டு மனைவியையும், குழந்தைகளையும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 13ம் திகதி அன்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த சுரேந்திரன், ஷிஜிமோளை தவறான வார்த்தைகள் பேசி, முடியை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். மேலும் குழந்தைகளையும் தாக்கியதோடு அனைவரையும் கொன்று விடுவேன் என கூறி வீட்டை பூட்டியதாக தெரிகிறது.
இதனால் பயந்து போன சுஷ்விகா மோள் வீட்டின் பின்புறமுள்ள ரப்பர் தோட்டத்திற்கு ஓடினார். கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டதால் அவர்கள் குழந்தைகளை தேட வில்லை என தெரிகிறது.
சற்று நேரம் கழித்து இரண்டு ஆண் பிள்ளைகள் மட்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த சுஷ்விகா மோள் தன்னை பாம்பு கடித்ததாகக் அழுதபடியே கூறியுள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் சுஷ்விகா மோளை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சுஷ்விகா மோள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே ஷிஜிமோளின் குழந்தைகள், தந்தை தினமும் எங்களை தாக்குவார் என கூறி அழுத வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. தந்தை கைது பின்னர் இதுதொடர்பாக ரவீந்திரன் மீது அவருடைய மனைவி ஷிஜிமோள் பொலிஸ் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் பொலிசார் கொலை மிரட்டல், சித்ரவதை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேந்திரனை கைது செய்துள்ளனர்.
தந்தை செய்த மோசமான செயலால் சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.