கனடாவில் பல மில்லியன் பணியிட வெற்றிடங்கள்! புலம்பெயர்ந்தோருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்

கனடாவில் கட்டுமானம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் சேமிப்பகங்கள், நிதி மற்றும் காப்பீடு, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் பணியிடங்கள் பல வெற்றிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் பல மில்லியன் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதால், அந்நாடு எக்ஸ்பிரஸ் நுழைவு முறையை மீண்டும் தொடங்கும் கட்டாய நிலைக்கு ஆளாகியுள்ளது.

2020 டிசம்பர் முதல் கொவிட் காரணமாக இந்த எக்ஸ்பிரஸ் நுழைவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அதன் விளைவாக, கனடாவில் நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பித்துவிட்டு பதிலுக்காக காத்திருந்தவர்களும், விண்ணப்பிக்கக் காத்திருந்தவர்களும், வழக்கத்துக்கு மாறாக, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்க நேர்ந்தது.

இந்நிலையில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு இந்த மாத தொடக்கத்தில் 1,500 எக்ஸ்பிரஸ் நுழைவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளது.

ஏன் கனடா நிரந்தர வாழிட உரிமம் கோர புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு விடுக்கிறது?

கனடாவில், 55 வயது மற்றும் அதற்கு அதிக வயதுடையோர் தொழிலாளர் சந்தையிலிருந்து வெளியேறுவதாலும், புதிதாக சிலரே பணியில் இணைவதாலும் கனடாவின் தொழிலாளர் சந்தை குறிப்பிடத்தக்க அளவில் சுருங்கியுள்ளது.

மறுபக்கத்தில், நாட்டில் சுமார் ஒரு மில்லியன் பணியிடங்கள், குறிப்பாக கோடைப் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன.

கனடாவில் இந்த பத்தாண்டுகளில் சுமார் 9 மில்லியன் பேர் ஓய்வு பெறும் வயதை எட்ட இருக்கிறார்கள். சமீபத்திய ஆய்வு ஒன்று, கனேடியர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் முன்கூட்டியே ஓய்வு பெற இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், பிறக்கும் குழந்தைகளின் அளவும் குறைந்துள்ளதாம். ஆக, ஓய்வு பெறும் பணியாளர்களின் இடங்களை நிரப்பும் அளவுக்கு புதிய இளம் பணியாளர்கள் இல்லையாம்.

ஆகவேதான், கனடா பணிகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப, தகுதியுள்ள புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறதாம்.

எந்தெந்த துறைகளில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன?

தகவல் நிலவரப்படி, கட்டுமானத் துறையில் இதுவரை இல்லாத அளவில் 89,000 பணியிடங்கள் வெற்றிடமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதுபோக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் சேமிப்பகங்கள், நிதி மற்றும் காப்பீடு, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் பணியிடங்கள் பல காலியாக உள்ளன.

மேலும், உணவகத் துறையிலும் பணியிடங்கள் காலியாக உள்ளனவாம். அதே நேரத்தில், மருத்துவத் துறை மற்றும் சமூக உதவி ஆகிய துறைகளில் பணியாளர்கள் தேவை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.