பண்ருட்டி அருகே பாடசாலை மாணவியை 28 நாட்களாக வீட்டில் அடைத்து துஷ்பிரியோக வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி, ஆகஸ்ட் 22-ம் திகதி முதல் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை.
இதனால் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தனர். இதனிடையே பண்ருட்டி பேருந்து நிலையப் பகுதியில் நேற்று முன்தினம், மாயமான மாணவி அழுது கொண்டிருப்பதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற அவர் மகளை அழைத்து வந்தார். அவரிடம் விசாரித்தபோது, ஒதியடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகி வந்ததாகவும், அவரது ஆசை வார்த்தைகளை நம்பி, அவருடன் சென்றதாக தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவன் தன்னை ஒரு வீட்டில்அடைத்து வைத்து துஷ்பிரியோக வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். வீட்டை விட்டு வெளியில் சென்றாலோ, யாரிடமாவது கூறினாலோ, தன்னையும், குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவேன் என சிறுவன் மிரட்டியுள்ளார்.
பின்னர் அவரே நேற்று முன்தினம் வெள்ளக்கரை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிவிதுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர்.
இதன் பேரில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தில் சிறுவன் மீது வழக்குப் பதிவுசெய்தனர். பின்னர் சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.