துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ளதுடன் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் துருக்கியின் அன்டாக்யா நகரில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கங்களில் குறைந்தது 3 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் 213 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முதலாம் இணைப்பு
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது அதே பகுதியில் தற்போதும், ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ளதுடன் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு துருக்கியின் அன்டாக்யா நகரில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் இதனால் கட்டடங்கள் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நிலநடுக்கம்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் பலியான பகுதியிலே தற்போதும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துருக்கியின் Hatay பிராந்திய மேயர் தெரிவிக்கையில், இப்பகுதியில் மட்டும் 21,000 மக்கள் நிலநடுக்கத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணிக்கையானது, இதுவரை வெளியான மொத்த பலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிபாதி என்றே தெரியவந்துள்ளது.
மேலும், Hatay பகுதியில் சுமார் 24,000 மக்கள் காயங்களுடன் தப்பியதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.
Hatay பிராந்தியத்தின் தலைநகரம் அந்தியோக்கியா பகுதியில் சுமார் 80 சதவீத கட்டிடங்கள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாகவும், இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் அச்சத்தில்
மேலும், நிலநடுக்கத்தால் உருக்குலைந்த 11 மாகாணங்களில் 9-ல் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முடித்துக் கொள்ளப்பட்டதாகவும், மோசமான நிலையிலுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகள் இனி முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது எஞ்சியுள்ள மக்களை மீண்டும் பீதியில் தள்ளியுள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் பல பேர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.