பந்தக்கால் பூஜை என்பது முக்கிய சடங்காக கருதப்பட்டாலும் சில பிரதேசங்களில் இது போன்ற வழக்கம் கிடையாது.
பந்தக்கால்
வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் துவங்குவதற்கு முன் பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படும்.
திருமணம் நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் வீட்டின் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் இந்த பந்தக்கால் நடப்படும். இது மங்கல நிகழ்ச்சி நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படும்.
பந்தக்கால் நடும் முறை
பெரும்பாலும் பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரங்களையே பயன்படுத்துவார்கள். சிலர் துளிர் விடும் கல்யாண முருங்கை, பலா மரக்கிளைகளையும் பயன்படுத்துவார்கள்.
இவற்றில் உள்ள இலைகள் நீக்கப்பட்டு ஒரு முனையில் மாவிலைகளில் மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் வைத்து, வெள்ளைத் துணியில் செப்புக்காசை முடிந்து நடுவார்கள்.
பந்தக்கால் நடும் குழியில் நவதானியங்கள், பால் ஊற்றி உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பந்தக்காலை நடுவார்கள். முகூர்த்த கால் நட காரணம் மணமகன் வீடு, மணமகள் வீடு, விசேஷம் நடக்கும் இடம் ஆகியவற்றில் தனித்தனியாக, இந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சுப முகூர்த்த நாளில், சுப முகூர்த்த வேளையில் நடப்படும்.
இந்த பந்தக்காலே நடக்க போகும் விசேஷத்திற்கு பந்தலை தாங்கி நிற்கும் தூண் போன்றதாக அமையும். நடைபெற போகும் சுப காரியம் இறைவனின் அருளால் நல்ல படியாக நடைபெற வேண்டும் என்பதற்காக பந்தக்காலில் பால் ஊற்றி நடப்படுகிறது.
மூங்கில் அல்லது துளிர்விடும் பலா மரம் செழித்து வளர்வது போல புதிதாக வாழ்க்கையை துவங்க போகும் மணமக்களின் வாழ்க்கையும் செழித்து வளர வேண்டும் என்பதற்காக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.
ஈசானிய மூலை என்பது சிவனுக்குரிய திசையாகும். அவரின் அருள் நடக்க போகும் சுப காரியத்திற்கு நிறைந்திருக்க வேண்டும் என்பதை குறிக்கவே பந்தக்கால் வடகிழக்கு திசையில் நடப்படுகிறது.
பந்தக்கால் சடங்கு தோன்றிய முறை
தற்போது திருமண விழாக்களின் போது குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல் முந்தைய காலத்தில் நாட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அந்நாட்டின் அரசருக்கும் மரியாதை நிமித்தமாக திருமண அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருந்தது.
ஆனால் அழைப்பு வைக்கும் அனைவரின் திருமணத்திற்கும் அரசரால் செல்ல முடியாது. அதனால் அரசர் நேரில் செல்ல முடியாத இடங்களுக்கு அவரின் ஆணைக்கோலை அனுப்பி வைப்பார்.
திருமண அங்கீகாரம்
அரசு ஆணைக்கோல் என்பது நாளடைவில் மருவி அரசாணைக்கால் என மாறி விட்டது. அரசரின் ஆணைக்கோல் வந்தாலே அரசரே அந்த திருமணத்தில் வந்து கலந்து கொண்டு, அந்த திருமணத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதாக அர்த்தம்.
அந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிப்பதற்காகவே பண்டைய காலம் தொட்டு திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் ஊன்றப்படும் வழக்கம் இருந்து வருகிறது. முகூர்த்த கால் நடப்பட்ட பிறகு துக்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள கூடாது என்ற கட்டுப்பாடும் நடைமுறையில் உள்ளது.