சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வின் போது பாயாசம் சரியில்லை என கூறியதால் இரண்டு திருமண வீட்டாரும் ஒருவரையொருவர் மூர்க்கமாக தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்விற்கு பின்னர், மணமக்களின் உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. பந்தியில் பரிமாறப்பட்ட பாயாசம் சுவையாக இல்லையென கேட்ட பெண் வீட்டாரிடம், மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பாயாசம் சரியில்லை என கூறிய பெண் வீட்டாரை
பாயாசம் சரியில்லை என கூறிய பெண் வீட்டாரை, மாப்பிள்ளை வீட்டார் தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இரண்டு வீட்டிலும் இளைஞர்கள் அதிகமாக இருந்ததால், இந்த சிறிய சண்டை பூதாகரமாக வெடித்துள்ளது. இரண்டு வீட்டையும் சேர்ந்த இளைஞர்கள் மண்டப வாசலிலேயே ஒருவரை ஒருவர் மூர்க்கமாக தாக்கிக்கொண்டுள்ளனர்.
இளைஞர்கள் என தொடங்கிய இந்த சண்டை பெண்கள், ஆண்கள் என பெரிய சண்டையாக உருவெடுத்துள்ளது. இந்த சிறிய பிரச்சனை பெரிதாக மாறியதால் மணமகன் மற்றும் மணமகள் இரண்டு வீட்டாரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விரைந்து வந்த காவல்துறை
திருமண மண்டபத்திற்கு வெளியே இரு தரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட நிலையில், இருதரப்பை சேர்ந்த பெரியோர்கள் இளைஞர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். அதற்குள் சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த சீர்காழி காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்ததுடன், அமைதியான முறையில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திச் சென்றனர்.
இரு வீட்டாரின் இளைஞர்களிடையே ஏற்ப்பட்ட இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்தும் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் இருவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.