திருமணப் பொருத்தம் பார்ப்பது அவசியமா? 10 பொருத்தங்கள் என்றால் என்ன?

திருமணப் பொருத்தம் என்பது ஆண், பெண் என இரு பாலரின் நக்ஷத்திரங்களை எடுத்துக் கொண்டு அவை இரண்டிற்கும் எந்த அளவிற்கு ஒத்துப் போகும் என்பதை கணக்கிடுவதே ஆகும்.

ஒரு காலத்தில் 22 பொருத்தங்கள் பார்க்கப்பட்டது பிறகு காலத்தின் மாற்றதால் 22 என்ற இந்த எண்ணிக்கை மெல்லக் குறைந்து 12 பொருத்தம் பார்த்தால் போதும் என்ற நிலை வந்தது இன்றைய காலத்தில் 10 பொருத்தங்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது.

எத்தனை பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்?’
சிலர் ஜோதிடரை சந்தித்து 10 இல் எது முக்கிய பொருத்தம் என்று கேட்பது உண்டு. ஆனால், ராமர் சீதைக்கு கூட எனது கணக்கில் எட்டு பொருத்தம் தான் காட்டுகிறது. ஆக நாம் யாருக்குமே பத்து பொருத்தம் என்பது அதிர்ஷ்டம்தான். ‘

என்று கேட்டால் குறைந்தது நான்கு பொருத்தமாவது இருத்தல் அவசியமாம். நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம். பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம்.

எனினும் ஏன் பல திருமணங்கள் வெற்றி அடைவது இல்லை? அனைத்துப் பொருத்தங்களும் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனினும் திருமணம் நிலைக்காமல் போக பல காரணங்கள் உண்டு.

நிறைய பேர் என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு ஜோதிடரை அணுகி நக்ஷத்திர அடிப்படையில் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் பார்த்து விட்டு அவசர கதியில் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். ஆனால் ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தை ஆராய மறந்து விடுகிறார்கள்.

ஜாதகத்தில் லக்கினம்

ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த வரனை எடுப்பதை விட எடுக்காமல் இருப்பது நல்லது.

காரணம் அது ராகு/ கேது தோஷம். இந்த மாதிரி தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது. திருமண வாழ்க்கை அதிக சோதனை நிறைந்து இருக்கும்.

அதே போல ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் இருத்தல் நல்லது அல்ல. ஆக இவை எல்லாம் ஒரு காரணம்.

சந்திராஷ்டமம்

இன்னொரு காரணம் திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நாளில் சந்திராஷ்டமம் இருத்தல் கூடாது.

அதே போல ஒரு குறிப்பிட்ட சுப லக்கினத்தில் (நல்ல நேரத்தில்) திருமணம் செய்வார்கள் . இந்நிலையில் அந்த நேரத்திற்கு உரிய லக்கினத்திற்கு அதிபதி நீச்சம் அல்லது லக்னத்திற்கு 6,8,12 இல் மறைந்தோ அல்லது வக்கிரம் அடைந்தோ இருக்கக் கூடாது. இது ரொம்ப முக்கியம்.

இதே போல ராகு தசையில் திருமணம் செய்வது, முடிந்தவரை ஆண், பெண் இருவரில் யாருக்கு ராகு தசை இருந்தாலும் அல்லது நடந்தாலும் சம்மந்தியாக வரும் நபரை பற்றி நன்கு விசாரித்து பின் திருமணம் செய்யவும்.

ஆக, இனி பெற்றோர்கள் மேற்படி இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பிள்ளைகளின் இல்லறம் என்றும் இனிக்கும்.

ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது

பொதுவாக ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்ப்பது நல்லது. ஒரே ராசி – ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யும் போது கோச்சார நிலைப்படி இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும்.

பையனுக்கு, அஷ்டமத்தில் குரு வந்தால் பெண்ணிற்கும் அந்த நேரத்தில் குரு அஷ்டமத்தில் வரும் (காரணம் இருவரும் ஒரே ராசி அல்லது நக்ஷத்திரம் என்பதால்) அதே போல ஏழரைச் சனியும் இருவருக்கும் வந்தால் சேர்ந்தே வரும்.

இதனால் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். திக்கு முக்காடி போய்விடுவார்கள். ஏனெனில் கணவருக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால் மனைவிக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருத்தல் அவசியம்.

அப்போது தான் கொஞ்சமாவது சிரமப்படாமல் ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை நடத்துவார்.இதனால் தான் ஒரே ராசியிலோ ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யக் கூடாது என்கின்றனர் பெரியவர்கள்.

பத்து பொருத்தங்கள்

1. தினப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும்.

2. கணப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு.

3. மகேந்திரப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும்.

4. ஸ்த்ரீ தீர்க்கம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும்.

5. யோனி கூடம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும்.

6. ராசிப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும்.

7. ராசி அதிபதிப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும்.

8. வசியப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள்.

9. ரஜ்ஜுப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள்.

10. வேதை பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.