மகாலட்சுமியிடம் வரங்கள் பெறுவதற்கான நாள் என்பதாலும் வரங்களை தரும் லட்சுமி தேவியை போற்றக் கூடிய நாள் என்பதாலும் இதை வரலட்சுமி விரதம் என்கிறோம்.
திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலி வரம் பெறுவதற்கும் திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் அமைவதற்கும் வரலட்சுமி விரதம் அன்று விரதம் இருந்து மகாலட்சுமி தேவியிடம் வேண்டிக் கொள்ளலாம்.
பெண்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய விரதம்
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியிடம் அனைத்து விதமான நலன்களையும், நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு இருப்பதே வரலட்சுமி விரதமாகும்.
இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த பூஜையை செய்வதால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
மகாலட்சுமி வழிபாடு
மகாலட்சுமியை வழிபடுவதற்கு மிகச் சிறப்பான நாள் வரலட்சுமி விரதம். இந்த நாளில் பெண்கள் தங்களின் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்பத்தின் சுபிட்சம், குழந்தைகளின் நலன், வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதற்காகவும் மகாலட்சுமியின் அருளை வேண்டி விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.
இந்த நாளில் முடிந்தவர்கள் பட்டினியாக இருந்தும், முடியாதவர்கள் பழங்கள் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு விரதம் இருந்து வழிபடலாம்.
வரலட்சுமி விரதத்தை ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
பொதுவாக வரலட்சுமி விரதம் என்பது அஷ்ட லட்சுமிகளையும் வழிபட்டு வரங்கள் பெறுவதற்கு ஏற்ற விரத நாளாகும்.
இது ஆடி மாதத்தில் வரக் கூடியது. ஆனால் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அமைந்தால் அந்த ஆண்டு ஆவணி மாதத்திலேயே வரலட்சுமி விரதம் அமையும்.
இந்த ஆண்டு வரலட்சுமி விரதமானது ஆவணி மாதத்தில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி வெள்ளிக்கிழமை இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் அமைகிறது.
வரலட்சுமி விரத பூஜைக்கான நேரம்
வரலட்சுமி விரத பூஜை அன்று முதல் நாளே மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து மறுநாள் பூஜைகள் செய்து மூன்றாவது நாளில் புனர்பூஜை செய்வது என்பது ஒரு முறை.
வரலட்சுமி பூஜை அன்று காலை மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, மாலையில் பூஜை செய்து, மறுநாள் புனர்பூஜை செய்வது என்பது இரண்டாவது முறை.
படம் வைத்து வழிபாடு செய்பவர்கள் வரலட்சுமி பூஜை அன்றே அம்பிகையை வீட்டிற்கு அழைத்து அன்றே பூஜையை நிறைவு செய்வது மூன்றாவது முறையாகும்.
இதில் அவரவருக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 24 தேதியே மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பவர்கள் மாலை 06.30 மணி முதல் 07.30 மணி வரையிலான நேரத்தில் அமைக்கலாம்.
ஆகஸ்ட் 25 மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பவர்கள் காலை 06.10 மணி முதல் 07.50 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் மகாலட்சுமியை அழைத்து காலை 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பூஜை செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து வழிபடலாம்.
வரலட்சுமி பூஜை செய்யும் முறை
மகாலட்சுமியை முதல் நாள் வீட்டிற்கு அழைத்தாலும் வரலட்சுமி பூஜை அன்று அழைத்தாலும், வீட்டிற்கு அழைத்த உடன் எளிமையாக ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து வழிபட்டு, பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.
வரலட்சுமி பூஜையன்று நல்ல வாசனை மலர்களால் அம்மனை அலங்கரித்து சர்க்கரை பொங்கல், பருப்பு பாயசம், பால் பாயாசம், புளியோதரை என எது முடியுமோ அதை நைவேத்தியமாக படைத்தும் கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், மகால்டசுமி அஷ்டம் என எது தெரியமோ அவற்றை படிக்கலாம்.
எதுவும் தெரியாதவர்கள் அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபடலாம். பூஜை முடித்த பிறகு அம்மனின் பாதத்தில் வைத்து வழிபட்ட மஞ்சள் நூலில் இரண்டு பூக்களை கட்டி கணவர் கையோலோ, வீட்டில் உள்ள பெரியவர்கள் கையாலோ அல்லது நாமே கட்டிக் கொள்ளலாம்.
பூஜையை நிறைவு செய்த பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும்.