இங்கிலாந்து தேசிய சுகாதார அமைப்பு உலகில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் ஊசி மருந்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்தில் நுரையீரல், மார்பகம், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய் பாதித்தவர்களுக்கு ரத்தமாற்று சிகிச்சை மூலம் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜெனென்டெக் ரோச் நிறுவனம் அடிஸோலிசூமாப் எனப்படும் முதல் ஊசி மருந்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
நோய் எதிர்ப்பு சிகிச்சை மருந்து
இதுவொரு நோய் எதிர்ப்பு சிகிச்சை மருந்தாகும். இது நோயாளியின் உடலில் உள்ள புற்றுநோய் செல்களைத் தேடி அழிக்க உதவுகிறது.
அடிஸோலிசூமாப் எனப்படும் இந்த ஊசி மருந்து நோயாளிகளுக்கு நரம்பு வழியாக நேரடியாக செலுத்திய 7 நிமிடத்தில் மருந்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று இந்த மருந்தை கண்டுபிடித்த இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை எனப்படும் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், “தோலுக்கு கீழ்” செலுத்தக்கூடிய இந்த ஊசி மருந்தால் புற்றுநோய்க்கான சிகிச்சை காலம் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊசி மருந்து மூலம் புற்றுநோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க முடிவதுடன், நாள்தோறும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என தேசிய சுகாதார சேவை அமைப்பின் ஆலோசகர் மற்றும் புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் அலெக்சாண்டர் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த ஊசி மருந்துக்கு அங்கீகாரம் கேட்டு மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (எம்எச்ஆர்ஏ) விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் புற்றுநோய் பாதித்தவர்களில் பெரும்பாலானவர்கள் உடனடியாக ஊசி மருந்து சிகிச்சைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அடிஸோலிசூமாப் உடன் இணைந்து ஹீமோதெரபி எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் ரத்தமாற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.