விநாயகர் வழிபாடு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருக்கு படைக்கப்படும் பலவிதமான உணவுகள் தான்.
உண்மையான பக்தியுடன் என்ன படைத்தாலும் விநாயகப் பெருமான் ஏற்றுக் கொள்வார் என்றாலும் அவருக்கு பிரியமான சில குறிப்பிட்ட பொருட்களை படைத்து வழிபடுவதால் விநாயகரின் அருளை முழுவதுமாக பெற முடியும்.
விநாயகருக்கு படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரக் கூடியதாகும்.
விநாயகர் வழிபாடு
விநாயகரை எங்கு பார்த்தாலும் ஒரு நிமிடம் நின்று தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுவது நல்லது.
அவருக்கு எல்லா உணவுகளும் பிடிக்கும் என்றாலும், நம்மால் முடிந்த எந்த உணவை நைவேத்தியமாக படைத்து வழிபட்டாலும் அதை மனதார ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருளக் கூடியவர் விக்னங்களை அழிக்கும் விக்னேஸ்வரர்.
விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்
உணவுப் பிரியரான விநாயகருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம், தேன், பால் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.
பழங்களில் குறைந்தது 5 வகைகள் பழங்கள் வைத்து விநாயகரை வழிபடலாம். அதிகமாக எத்தனை வகை பழங்கள் படைக்க முடியுமோ படைக்கலாம்.
எதுவும் முடியாதவர்கள் இரண்டு வாழைப்பழம் மட்டும் படைத்து வழிபடலாம். விநாயகருக்கு பிடித்த மற்றொரு இனிப்பு வகை லட்டு.
இந்த நாளில் வித விதமான சுவையான லட்டுக்கள் செய்து விநாயகருக்கு படைக்கலாம்.
விநாயகருக்கு விருப்பமான பொருட்கள்
அதே போல் விநாயருக்கு விருப்பமானவற்றில் மிகவும் முக்கியமானது அருகம்புல்.
விநாயகர் சதுர்த்தி அன்று இரண்டு அருகம்புல்லாவது விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும்.
இது தவிர வன்னி இலை, வில்வ இலை, செண்பகப்பூ, செம்பருத்திப் பூ, எருக்கம்பூ ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.
விநாயகருக்கு மஞ்சள் நிற மலர்கள் என்றால் மிகவும் பிரியம். அதனால் ஏதாவது ஒரு மஞ்சள் நிற பூவை சமர்பித்து வழிபடலாம்.
விநாயகருக்கு சிதறு தேங்காய்
விநாயகருக்கு விடலைக்காய் என சொல்லப்படும் சிதறு தேங்காய், சுட்ட தேங்காய் ஆகியன மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
இதனால் விநாயகர் சதுர்த்தியன்று ஏதாவது ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகரை மனதார வேண்டிக் கொண்டு சிதறு தேங்காய் விடலாம்.
இதனால் கண் திருஷ்டி, நம்முடைய வாழ்க்கையில் உள்ள தீவினைகள், துன்பங்கள், தடைகள் அனைத்தும் விலகி ஓடி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.