நவராத்திரியின் முக்கிய அம்சமாக விளங்கும் கொலுவை இப்படி வைத்தால் கோடி அதிஷ்ட யோகம் வந்து சேரும்.

நவராத்திரியின் முக்கிய அம்சமாக விளங்குவது கொலு. முதல் படியில் அம்பிகையின் வடிவங்கள் அடுத்த படியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள், 3வது படியில் தெய்வங்களின் சிலைகள், 4வது படியில் ரிஷிகள் மற்றும் மகான்கள் உள்ளிட்டோர்களின் சிலைகள், 5வது படியில் பலவிதமான மனிதர்களின் சிலைகள், 6வது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகளின் சிலைகள், 7வது படியில் குழந்தைகளை கவரும் பலவிதமான சிலைகள் போன்றவை வைத்து கொலு அமைப்பது வழக்கம்.

நவராத்திரி கொலு வைக்கும் போது படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையிலேயே அமைப்பது வழக்கம். இப்படி அமைக்கப்படும் கொலுவில் அம்பிகை எழுந்தருளி, நம்முடைய பூஜைகளை ஏற்று நமக்கு அருள் செய்வதாக கூறப்படுகிறது.

நவராத்திரியில் அம்பிகையை வழிபட்டால் நம்முடைய வாழ்வில் ஏற்படும் பலவிதமான கஷ்டங்கள் என்னும் அசுரனை அம்பிகை அழித்து நமக்கு வளமான வாழ்வை தருவாள் என்பது ஐதீகம்.

நவராத்திரி வழிபாடு

அம்பிகையை வழிபடுவதற்கு உரிய ஒன்பது இரவுகளை நவராத்திரி என்கிறோம்.

புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி தசமி வரையிலான ஒன்பது நாட்களும் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 15 ம் தேதி துவங்கி அக்டோபர் 24 வரை கொண்டாடப்பட உள்ளது.

நவராத்திரி கொலு

நவராத்திரி என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது கொலு தான். அமாவாசை நாளிலேயே கொலு அமைக்கும் வேலைகளை துவங்கி விடுவார்கள்.

தினமும் அம்பிகையை ஒவ்வொரு ரூபங்களில் அலங்கரித்து அந்த நாளைக்குரிய நிற மற்றும் மலர்களால் அலங்கரித்து, நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

நவராத்திரியின் பத்தாவது நாளை விஜயதசமியாகவும், கடைசி 3 நாட்ளை துர்கா பூஜையாகவும் வழிபடுவது வழக்கம்.

கொலு வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொலு பொம்மைகள் வாங்கி வைத்து கொலு அமைத்து அம்பிகையை வழிபடுவார்கள்.

கொலு வைக்காமல் வழிபடும் முறை

கொலு வைப்பவர்கள் காலை, மாலை இருவேளையும் நைவேத்தியம் படைத்து பூஜை செய்து கண்டிப்பாக வழிபட வேண்டும்.

கொலு வைக்காமல் நவராத்திரி வழிபாடு செய்பவர்கள் மூன்று வழிகளில் வழிபடலாம்.

ஒன்று அகண்ட தீபம் ஏற்றி வழிபடலாம், 2வது கலசம் வைத்து வழிபடலாம், 3வது முறையாக படம் வைத்து வழிபடலாம்.

இந்த முறைகளில் வழிபடுபவர்கள் ஏதாவது ஒரு வேளை மட்டும் தினமும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்பிகையை வழிபடலாம்.

அகண்ட தீபம்

அகண்ட தீபம் வைத்து வழிபடுபவர்கள் அகலமாக மண் அகல் விளக்கினை புதிதாக வாங்கி தண்ணீரில் நன்றாக ஊற வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து நீண்ட திரி போட்டு, கால் லிட்டர் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

ஒரு மனைப்பலகையில் வாழை இலை பரப்பி அதில் பச்சரிசி பரப்பி அதன் மீது அகண்ட தீபத்தை வைத்து அதன் பிறகு ஏற்ற வேண்டும்.

நவராத்திரியின் முதல் நாளில் காலை 6 மணிக்கு முன்பாக இந்த விளக்கை ஏற்றி விட வேண்டும்.

இந்த விளக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இரவும், பகலும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒருவேளை தானாக அணைந்து விட்டாலும் கவலை படாமல் மீண்டும் ஏற்றி வழிபடலாம்.

இந்த விளக்கை அம்பிகையாக நினைத்து ஒன்பது நாட்களும் பூஜை செய்து வழிபடலாம்.

கலசம்

பித்தளை சொம்பினை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய், மஞ்சள் தூள், லவங்கம், எலுமிச்சை ஆகியவை போட்டு அதன் மீது தேங்காய் வைத்து, அதைச் சுற்றி 5 அல்லது 7 மாவிலைகளை வைத்து அலங்கரிக்க வேண்டும்.

இந்த கலவசத்தை மனைப்பலகையில் பச்சரிசி பரப்பி, அதன் மீது வைத்து வழிபட வேண்டும்.

படம்

இலையில் பச்சரிசி பரப்பி அதன் மீது வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்பிகையின் படத்தை வைத்து வழிபடலாம்.

இந்த படத்திற்கு தினமும் காலை மற்றும் மாலையில் அந்தந்த நாளுக்குரிய மலர்களை சூட்டி, நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.