இலங்கை கிரிக்கெட் நெருக்கடிக்கு ரணில் வழங்கிய சிறந்த தீர்வு!

நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையிலான குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைவை நடைமுறைப்படுத்துவதே இலங்கை கிரிக்கெட் நெருக்கடிக்கு சிறந்த தீர்வாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் தான் பாரபட்சமின்றி இருப்பதாகவும், தான் கிரிக்கெட்டின் பக்கம் இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

உறுதியான தீர்வு
இடைக்காலக் குழுக்களை நியமிப்பது ஒரு உறுதியான தீர்வாகும் என்றும், எனினும் இந்த பிரச்சினைக்கு, அது போதுமானதாக இருக்காது என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை கிரிக்கெட் யாப்பு வரைவு தொடர்பான ‘சித்ரசிறி குழுவின் அறிக்கை’ அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்த புதிய யாப்பு வரைவு, இலங்கை கிரிக்கெட்டுக்கு உறுப்பினர்களை நியமனம் தொடர்பிலான மறுசீரமைப்பு மற்றும் அதன் அமைப்பு, நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் மாற்றங்களை பரிந்துரைக்கிறது.

முன்மொழியப்பட்ட யாப்பு
முன்மொழியப்பட்ட யாப்பில், இலங்கை கிரிக்கெட் குழுவானது 18 உறுப்பினர்களைக் கொண்ட பணிப்பாளர் சபையினால் நிர்வகிக்கப்படும். ஒவ்வொருவரும் 4 வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள்.

இந்த பணிப்பாளர்கள் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருப்பார்கள். அத்துடன் முடிவுகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் பணிப்பாளர் குழுவால் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்கப்படும். என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.