இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பல தடவைகள் தெரியப்படுத்திய பின்னரே ஐசிசியால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று குழு நேற்று கூடியதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று குழு
இந்த கூட்டம் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தலைமையில் இடம்பெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் மீது ஐ.சி.சி விதித்துள்ள தடை மற்றும் பிரச்சினைக்கு தீர்வுகாண தேவையான மூலோபாய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதே நிறைவற்று குழு கூட்டத்தின் நோக்கம் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐசிசி வெளியிட்ட தகவல்கள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பலமுறை தெரியப்படுத்தியதாகவும் இந்த எச்சரிக்கை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அதிக கவனம் செலுத்தவில்லை என்று அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோரிக்கை
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டு அமைச்சு தலையிடுவது குறித்து ஐசிசி தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தடை தொடருமானால், இலங்கையில் கிரிக்கெட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இடைநிறுத்தப்பட்டுள்ள உறுப்புரிமையை மீளப் பெறுவதற்கும் அரசியல் தலையீடுகளைத் தவிர்ப்பதற்கும் உரிய சூழலை உருவாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.