2023 உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் முதலாவது அணியாக இந்திய அணி நுழைந்துள்ளது.
இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 70 ஓட்டங்களால் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றள்ளது.
மும்பையில் உள்ள வங்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்களையும், சுப்மன் கில் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதேவேளை, இன்றையதினம் சச்சினின் அதிக முறை ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
இதுவரை ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை பெற்றிருந்த நிலையில் விராட் கோலி 50 சதங்களை பெற்றுள்ளார்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய, 398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல்134 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களை பெற்றனர்.
இதன்படி இந்திய அணி 2023 ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரில் முதலாவது அணியாக இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.