கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய துரோகம்: விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

தமது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்பு படையினரிடமும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் தேசிய விளையாட்டு சபையின் பணிப்பாளர் சுதத் சந்திரசேகர ஆகிய இரு தரப்பினரிடம் இருந்து தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முறைப்பாடு
“இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தாம் குற்றப்புலனாய்வுத் துறையில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளேன்.

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

‘நாங்கள் உங்கள் பின்னால் வரலாம், அல்லது நீங்கள் எங்களிடம் வரலாம்’ என்று ஷம்மியும் சுதாத்தும் ஒருவித அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

முன்னதாக நவம்பர் 6, 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு நிர்வாகக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் மூன்று கடிதங்களை அனுப்பியதன் மூலம் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சர்வதேச கிரிக்கெட் அதிகாரிகளை தவறாக வழிநடத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப் பெரிய கருப்பு புள்ளியும், கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய துரோகமுமாகும்.

தேசிய விளையாட்டு சங்கங்களில் ஊழல்
கிரிக்கெட் திருடர்களை சிக்க வைக்க நாடாளுமன்றம் கோப் குழுவை நியமித்தது.

ஆனால், தற்போது கோப் குழு துரோகிகளின் பிடியில் சிக்கி சினிமா காட்சியாகி விட்டது போல் தெரிகிறது.

தம்மை பதவி விலகுமாறு எவரிடமிருந்தும் தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கவில்லை. கட்சி மாறுவதோ அல்லது எதிர்க்கட்சியில் அமருவதோ தமக்கு எண்ணம் இல்லை.

தேசிய விளையாட்டு சங்கங்களில் ஊழலை தடுப்பதே தனது ஒரே நோக்கம்”என்றார்.