தவறான காரணிகளைக் குறிப்பிட்டு இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 220 இலட்சம் மக்களினதும் விளையாட்டு உரிமையை மீறும் செயலாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையினால் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 3 கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு நேற்று(19) வெளியிட்டுள்ள விசேட காணொளியூடான அறிவிப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
உலகக் கிண்ண இறுதிப் போட்டி
“உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் தினத்தில் கிரிக்கெட்டை நேசிக்கும் இந்நாட்டு மக்களுக்கு புதிய விடயங்களை தெரியப்படுத்தியிருக்கின்றேன்.
இலங்கை கிரிக்கட் நிறுவனம் கடந்த 6,7 மற்றும் 9ஆம் திகதிகளில் 3 கடிதங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இக்கடிதங்களை வாசிக்கும் போது இலங்கையில் கிரிக்கெட் எவ்வாறு தடை செய்யப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நவம்பர் 6 ஆம் திகதி எழுதிய கடிதத்தில் இடைக்காலக் குழுவை விமர்சித்துள்ளதுடன், அரசியல் ரீதியான தலையீடுகள் இடம்பெறுவதாகவும்,அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இரண்டாவது கடிதத்தின் மூலம் இடைக்காலக் குழு விளையாட்டுச் சட்டத்தை மீறியுள்ளதாகவும், இது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்டத்திற்கு முரணானது என்றும் இடைக்கால குழுவொன்றை நியமித்தால் கிரிக்கெட்டை தடை செய்ய நேரிடும் என்று கூறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் 2024, ஐ.சி.சி சர்வதேச மாநாடு, டி20 போட்டி போன்றவற்றை பிற நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
3 ஆவது கடிதத்தின் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சரின் முயற்சியாலையே நாடாளுமன்ற விவாதம் நடந்ததாகவும், கிரிக்கெட் உறுப்பினர்கள் நீக்கப்பட்டு அதன் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சட்டம்
மேலும் கிரிக்கெட் சட்டத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது ஐ.சி.சி. சட்டத்துக்கு முரணானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் 20 வீதத்தை விளையாட்டுத்துறை அமைச்சு கேட்பதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதங்களில் உள்ள உள்ளடக்க தகவல்கள் தவறானவையாகும். இதில் அரசியல் ரீதியான தலையீடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
அதே நேரம் இது நட்புவட்டார விளையாட்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது 220 இலட்சம் மக்களதும் விளையாட்டு உரிமையை மீறும் செயலாகும்.” என்றார்.