இலங்கையில் வாகனங்களை வாங்கும் போதும், விற்கும் போதும் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
ஒரு வாகனத்தை விற்கும் போது பெரும்பாலானோர் MTA 6 என்ற படிவத்தில் வாங்குபவரின் பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றை நிரப்பாமல் வெறுமனே விற்பனை கடிதத்துடன் வாகனத்தையும் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
அவ்வாறு விற்பனை செய்யும் போது வாங்குபவர் RMV (Registration of Motor Vehicles department) இல் அவரது பெயருக்கு அவ்வாகனத்தை பதிவு செய்யாமல் ஏதாவது ஒரு கொள்ளை சம்பவம் அல்லது வீதி விபத்தை ஏற்படுத்தினால், பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் என்றவகையில் நீங்கள் அப்பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, விற்கும்போதே கட்டாயமாக்கப்பட ”MTA 6” படிவத்தினை முழுமையாக பூர்த்திசெய்து ”MTA 8” ( மாற்றிபெறுபவர் நிரப்பப்படவேண்டிய) படிவத்தினையும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு 14 நாட்களுக்குள் அனுப்பி பெயர்மாற்றம் செய்யப்படவேண்டும் என்பது கட்டாயமான செயற்பாடாகும்.
மேலும், ”MTA 6” படிவத்தை நிரப்பாது வாகனத்தை விற்பது தண்டனைக்குரியதும் எதிர்பாராதவிளைவுகளை கொடுக்கக்கூடிய செயற்பாடாகும்.
இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின் படி,
1. ஒரு நாள் சேவையிலான உடைமை மாற்றத்திற்கான விண்ணப்பப்படிவத்தை கொழும்பு, நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கும் கம்பஹா, அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் குருநாகல் அநுராதபுரம் ஆகிய மாவட்ட அலுவலகங்களிலுள்ள ஒரு நாள் சேவை உடைமை மாற்ற கிளையில் மாத்திரம் சமர்ப்பிக்கலாம்.
அவற்றை அலுவலக தினங்களில் மு.ப. 8.30 தொடக்கம் பி.ப 2.30 வரை தலைமை அலுவலகத்திலும், பி.ப.12.00 மணிவரை மாவட்ட அலுவலகங்களிலும் ஒப்படைக்கலாம்.
2. உடைமை மாற்றத்தைப் பதிவு செய்வதற்காக 06 மாதங்கள் கடந்துள்ள உடைமை மாற்ற விண்ணப்பப்படிவமானது ஒரு நாள் சேவையின் கீழ் பொறுப்பேற்கப்பட மாட்டாது.
3.மாற்றிப்பெருபவரினூடாகவே விண்ணப்பம் மற்றும் தஸ்தாவேஜுகள் ஒரேநாள் சேவை பிரிவுக்கு கையளிக்கப்படுவதோடு ஒரே, குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களிடயே வாகன உடைமை மாற்றத்தினை ஒரு நாள் சேவையில் பெற்றுக்கொள்ள விரும்பினால் உடைமை மாற்றிக் கொடுப்பவர் மற்றும் உடைமை மாற்றிப் பெறுபவர் ஆகிய இருவரும் சமூகமளித்தல் வேண்டும்.
4. அண்மைய உடைமை மாற்றப் பதிவானது ஒரு நாள் சேவையில் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பின், அதற்கு அடுத்து வருகின்ற உடைமை மாற்ற விண்ணப்பப்படிவமானது 06 மாதங்கள் கடந்திருந்தால் மட்டுமே ஒரு நாள் சேவைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
5. விகாரைகள், தேவாலயங்களுக்குச் சொந்தமான வாகனமாயின், “உடைமை மாற்றத்திற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடிதத்தை சமர்ப்பித்தல் அத்தியாவசியமாகும்.
6. அரச அல்லது அரச நியதிச்சட்ட சபைகளது வாகனங்கள் மற்றும் நீதிமன்றத்தால் ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் என்பன, ஒரு நாள் சேவையின் கீழ் தனிநபர்களுக்கு உடைமை மாற்றம் செய்யப்படமாட்டாது.
7. உடைமை மாற்றம் செய்யப்பட்டு 14 நாட்களுக்குள்,(அரசாங்கத்துக்குரிய வாகனமாக இருந்து உரிமை மாற்றம் செய்யப்படும் போது 180 நாட்கள்) மாற்றம் பெற்றவர் விண்ணப்படிவத்தை ஒப்படைத்தல் வேண்டும்.
அவ்வாறு செய்யாதுவிடின் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு ஒரு நாளுக்கு 50ரூபாய் வீதம், ஆகக்கூடியது 50000 ரூபாய் வரையும், உளவு இயந்திரங்களுக்கு ஒரு நாளுக்கு 25ரூபாய் வீதம், ஆகக்கூடியது 25,000ரூபாய் வரையும், ஏனைய வாகனங்களுக்கு 100ரூபாய் வீதம் ஆகக்கூடியது ரூ.1000000ரூபாய் வரையும், வாகன வகுப்பிற்கேற்ப மேலதிக தாமதக்கட்டணம் அறவிடப்படும்.
8. பணம் செலுத்தும்போது, நாரஹேன்பிட்ட தலைமைக் காரியாலயத்திற்கு வரும் சேவைபெறுநர்கள் திணைக்களத்தின் வளாகத்திற்குள் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கிளையிலும் மாவட்டக் காரியாலயங்களுக்கு வருகின்ற சேவைபெறுநர்கள் அக்காரியாலயத்திலேயும், உரிய சேவைகளுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியும் என்பதுடன், கட்டணம் செலுத்தப்பட்டதற்காக வழங்கப்படுகின்ற பற்றுச்சீட்டின் பிரதியை, தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமானதாகும்.
மோட்டார் வாகனமொன்றின் பதிவு உடைமையை ஒரே நாளில் மாற்றும்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
1. MTA 6 படிவ B1 பிரதி (ஒரே நாள் சேவையின் கீழ் உரிமை மாற்றத்தினை பெற்றுக் கொள்வதாயின் A பிரதியையும் சமர்ப்பித்தல் வேண்டும்)
2. MTA 8 படிவC பிரதி.
3. வாகனப் பதிவுச் சான்றிதழ்.
4.மாற்றும் திகதியில் செல்லுபடியான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் அதன் பிரதி.
5. மாற்றிக் கொடுப்பவரின் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் / செல்லுபடியான கடவுச் சீட்டின் பிரதி.
6. மாற்றிப்பெருபவரின் 3.5cm 4.5cm அளவிலான வர்ண/கருப்பு வெள்ளை படம் ஒன்று MTA 8 படிவத்தின் C பிரதியில் குறித்த இடத்தில் ஒட்டப்படல் வேண்டும்.
7. மாற்றிக் கொடுப்பவர் அல்லது புதிய உடைமையாளர் ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக ஆக இருப்பின் அதன் முகாமைத்துவ பணிப்பாளரினால் உடைமை மாற்ற படிவங்களில் நிறுவனத்தின் பொறிக்கப்பட்ட இலச்சினையுடன் கையொப்பம் வைத்தல் வேண்டும்.
முகாமைத்துவ பணிப்பாளர் இல்லாத சந்தர்ப்பத்தில் பணிப்பாளர் சபையின் பிற இரண்டு அங்கத்தவர்களுக்கு உடைமை மாற்ற படிவங்களில் கையொப்பம் வைக்க முடியும்.
வாகனத்தை மாற்றிக் கொடுப்பவர் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது பொதுக் நிறுவனம் எனின் பணிப்பாளர் சபையின் இரண்டு அங்கத்தவர்கள் (பெயர் பதவியுடன்) கையொப்பமிட்ட உடைமையை மாற்ற, உறுதிப்படுத்தல் கடிதமும் அவசியமாகும்.
8. நிறுவனங்களுக்கு சொந்தமான ஒரு வாகனத்தை உடைமை மாற்றம் செய்யும்போது நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் பெயர்ப் பட்டியல், நிறுவனங்கள் பதிவாளர் திணைக்களத்தினால் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதன் பதிவுச் சான்றிதழின் பிரதி, உடைமை மாற்றப் படிவங்களில் கையொப்பமிடும் நபர்களது சான்றுப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளின் பிரதிகள் மற்றும் நிறுவனத்தின் முகவரியை உறுதிப்படுத்துவதற்காக நிறுவன பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 1/form 13/form20/form 40 போன்ற படிவங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
9 அடகு வைத்தால், முற்றுமுழுதான உரிமை, குத்தகை இருந்தால் அது இரத்துச் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் கடிதம். 10 சொகுசு வரி இருந்தால் அவை கொடுப்பனவு செய்யப்பட்டமைக்கான பற்றுச்சீட்டு.
11 மாற்றிப் பெறுபவரது அடையாள அட்டை அல்லது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றிலுள்ள முகவரிகளில் மாற்றம் ஏதாவது இருந்தால் முகவரியை உறுதிப்படுத்த, கிராம அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்.
வாகன விற்பனை தொடர்பாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை கீழுள்ள இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்