யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாய்; வெடித்த சர்ச்சை! முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென , உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா (வயது 25) என்ற இளம் தாய் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்னுக்கு பிரசவித்த தாய்க்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டதும் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறும் பணிக்கப்பட்டதால் , நோய் தொற்று அதிகமாகி தாய் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்துகின்றனர். சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,

கடந்த 21ஆம் திகதி குழந்தை பேறுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார்.

பின்னர் 25ஆம் திகதி சனிக்கிழமை தாய்க்கு அம்மை நோய் தொற்று அறிகுறிகள் காணப்படுவதாக கூறி சில மருந்துகளை எழுதி தந்து , அவற்றை வாங்கி கொடுக்குமாறும் , அம்மை நோயுடன் , வைத்தியசாலை விடுதியில் வைத்திருக்க வேண்டாம் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என பணித்தனர்.

காலையில் கூட பிரஷர் இருக்கு என சொன்னவர்கள் மாலை 5 மணிக்கு தாயையும் பிள்ளையையும் அழைத்து செல்லுமாறு பணித்ததால் , நாம் வீட்டிற்கு அழைத்து சென்றோம்.

வீடு வந்த பின்னர் தாய் மிக சோர்வாக , பலவீனமாக காணப்பட்டார். பிள்ளைகளுக்கு பாலூட்டவோ , அவர்களை அரவணைக்கவோ முடியாத அளவுக்கு தாயின் உடல் பலவீனமாக இருந்துள்ளது. அதனால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரிடம் காட்டிய போது , உடனடியாக நீங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு செல்லுங்கள் , தங்கி நின்று சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை மாலையே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தோம். சிறுநீர் பரிசோதனையை தனியார் ஆய்வு கூடத்தில் செய்து வருமாறு கொடுத்தனர். பரிசோதனை செய்து கொடுத்தோம் அதன் பின்னர் இரவு 12 மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் திங்கட்கிழமை காலை , தாயின் சிறுநீரகத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு உள்ளமையால் , உடல் உறுப்புக்கள் பழுதடைந்து செல்கின்றன என தெரிவித்தனர்.

மீள சிறுநீர் பரிசோதனை செய்து வருமாறு திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திரும்பி போதனா வைத்திசாலைக்கு வந்து சிறிது நேரத்தில் மாலை 4.45 மணியளவில் தாயை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து நடத சம்பவங்களை வைத்தியசாலை பணிப்பாளரிடம் நடந்த அனைத்து விடயங்களையும் கூறி முறையிட்டோம்.

ஊழியர்களை மிரட்டிய அதிகாரி
விசாரணைகளை ஆரம்பிப்பதாகவும், பிரசவம் நடந்து 48 நாட்களுக்குள் தாய் உயிரிழந்து உள்ளமையால், அதனை மறைத்து விட முடியாது. முழுமையான விசாரணை நடத்தப்படும் என நம்பிக்கை தந்து அவர் அனுப்பி வைத்தார். எனினும் மரண விசாரணை அதிகாரி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களுடன் நடந்து கொண்ட விடயம் அவர்களின் அணுகு முறை என்பனவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்திருந்தது.

பொலிஸ் அதிகாரி , தானாகவே இது ஒரு போதனா வைத்தியசாலை இங்கே கவனயீனம் , வைத்திய தவறுகள் நடக்க சாத்தியமில்லை என கூறினார். அதுமட்டுமல்லாது எம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ளவோ , எம் தரப்பு கருத்தை கேட்கவோ அவர் விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட எமது குரலை அடக்கவே முயன்றார்.

சடலத்தை அடையாளம் காட்டி குறிப்புக்களை சொல்லும் போதும் அவர் அருகில் வரவில்லை. தூர நின்றே குறிப்பெடுத்தார். அதன் போது பிரேத அறையில் இருந்த ஊழியர்கள் கிட்ட வந்து சடலத்தை பார்த்து குறிப்பெடுங்கள் என அழைத்த போது , ஊழியர்களை மிரட்டி , தான் அருகில் வர தேவையில்லை என்றார்.

அதேவேளை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திசாலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கூறிய போது , அவரும் அது தொடர்பில் பணிப்பாளரிடம் முறையிடுங்கள் , மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றியே தான் அறிக்கை தர முடியும் என்றார்.

மாதிரிகள் கொழும்புக்கு
பின்னர் சில மாதிரிகளை கொழும்புக்கு மேலதிக பரிசோதனைக்காக கொழுப்புக்கு அனுப்ப வேண்டும். அறிக்கை கிடைக்க இரண்டு கிழமைகளுக்கு மேலாகும் என்றார். உடலத்தை மீள சோதனை செய்ய வேண்டி வருமா என சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்ட போது , தேவையான மாதிரிகள் எடுத்து விட்டோம். உங்கள் சமய வழக்கப்படி செய்யுங்கள் என கூறினார்

இந்த நிலையில் இன்று தாய் இல்லாமல் இரு பிள்ளைகளும் தவித்து வருகின்றன. வைத்தியசாலையில் இருந்து தாயையும் பிள்ளையையும் உடனே அழைத்து செல்லுங்கள் என கூறியதால் தான் , உரிய சிகிச்சைகள் இன்றி தாய் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ள பெணிணின் உறவினர்கள் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.