பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி! உயர்நீதிமன்றம் அறிவிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது

முவன்கந்த தோட்டத்தினை சேர்ந்த இளைஞரொருவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணை முடிவின் போதே நேற்று ( 04.12.2023) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர்நீதிமன்ற நீதியரசர்களான எச்.எம்.டி.நவாஸ் மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வா, முவன்கந்த தோட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, தமது தோட்டம் உள்ளடங்களாக அனைத்து பெருந்தோட்டப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு 200 வருடங்களாக கிடைக்காதுள்ள முகவரியை பெற்றுக்கொடுக்குமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.