இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை மதுசார பாவனை எமது நாட்டிற்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை வருமானத்தை அதிகரிப்பதற்கு
மதுபான நிலையங்களை, திறக்கும் காலத்தை அதிகரிப்பதன் ஊடாக விபத்து மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.
சுற்றுலாத் துறை வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்தாலும், இது மதுசாரம் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களின் மறைமுக விளம்பர நோக்காக காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற மதுசார வரித் தொகை 165.2 பில்லியன் ரூபாயாகும்.
எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மதுசார பாவனை காரணமாக அரசாங்கத்திற்கு 237 பில்லியன் ரூபாய் சுகாதாரம் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பணிப்பாளர் சம்பத் டி சேரம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.