ஐந்து சிறுமிகளை வன்புணர்ந்த பாதிரியார் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

பெண்கள் விடுதியில் சிறுமிகளை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ போதகர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் 63 வயதுடைய கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் கிருலப்பனை காவல்துறை பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபரிடம் முறைப்பாடு
வெள்ளவத்தையில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் சிறுமி போதகர் தம்மை வன்புண்வு செய்ததாக அதிபரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகத்தின் பேரில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியில் 23 வயதில் பணிபுரியும் பெண் ஒருவரும், 11 முதல் 18 வயதுக்குட்பட்ட 8 பாடசாலை மாணவிகளும் தங்கியுள்ளனர் எனவும் அவர்களில் 6 பேர் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சகோதரிகள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல வருடங்களாக வன்புணர்வு
காவல்துறையின் விசாரணையில், குறித்த போதகர் பல வருடங்களாக 5 சிறுமிகளைவன்புணர்வு செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், சந்தேகத்திற்குரிய பாதிரியார் சிறுமிகளிடம் காட்டியதாகக் கூறப்படும் ஆபாச காட்சிகள் அடங்கிய செல்போனுடன் கைது செய்யப்பட்டார்.

தேவாலயமொன்றுடன் இணைக்கப்பட்டுள்ள குறித்த தங்குமிடமானது பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.