இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், வரி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு தொடங்கும் போதும், கட்டிட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய் உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமையை பதிவு செய்யும் போதும் இந்த எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரி அடையாள இலக்கம் பெற்றாலும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வருடாந்த வரி
வருடாந்த வரி விலக்கு வரம்பான 12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பதிவு செய்வது கட்டாயமாகும். மேலும், ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கு மேல் இருந்தால், வரி செலுத்த வேண்டும் என வரி திணைக்களத்தால் அடையாளம் காணப்படும்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்வது குறித்து குறிப்பிட்ட குழுவால் தவறான கருத்து பரப்பப்படுகின்றது.
அனைவரும் வரி செலுத்துதலுக்கு உட்பட்டவர்கள். பதிவு கட்டாயம். ஆண்டுக்கு 12 லட்சத்தை தாண்டினால், அவர் வரி செலுத்துபவராக மாறுகிறார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.