12 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய அதிசய சங்கு ; திருக்கழுக்குன்றம் கோயிலில் பக்தர்கள் பரவசம்

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சங்கு தீர்த்தக் குளத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை பிறக்கும் சங்கு இன்று காலை சங்கு தீர்த்தக் குளத்தில் பிறந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இதில், தாழக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் சந்நிதி தெருவின் கடைசி பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் சங்கு தீர்த்த குளம் அமைந்துள்ளது.

சிறப்பு வாய்ந்த தீர்த்தமாக விளங்கும் இந்த சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும் வைபவம் நடைபெற்று வருகிறது.

கடந்த 1939, 1952, 1976, 1988, 1999ம் ஆண்டுகளில் இக்குளத்தில் சங்கு தோன்றியுள்ளது.

கடைசியாக செப்டம்பர் 1, 2011 ஆண்டு சங்கு தோன்றியுள்ளது. அதன்பின்னர் 12 ஆண்டுகள் பிறகு இன்று சங்கு தீர்த்த குளத்தில் மிகுந்த சத்தத்துடன் சங்கு பிறந்துள்ளது. சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள்.

அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும்.

சங்கு பிறந்ததை கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலில் குவிந்து சங்கை கண்டு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

பொதுவாக கடலில் தான் சங்குகள் உருவாவது வழக்கம். ஆனால் திருக்கழுக்குன்றத்தில் உள்ள சங்கு தீர்த்த குளத்தில் சங்கு பிறப்பது ஒரு ஐதீகமாக பார்க்கப்படுகிறது.