இந்த ஆண்டு வைகாசி விசாகம் மே 22ம் தேதி புதன்கிழமை வருகிறது. இந்த நாளில் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வழக்கம் போல் விரதத்தை துவங்கி விட வேண்டும். முடிந்தவர்கள் இரு வேலையும் கோவிலுக்கு சென்று வரலாம்.
முடியாதவர்கள் மாலையில் மட்டுமாவது கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். வீட்டில் முருகன் விக்ரஹம், வேல் வைத்திருப்பவர்கள் சிறிது பால் ஊற்றி அதற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.
படம் மட்டும் வைத்திருப்பவர்கள் பாலை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
அன்றைய தினம் முருகன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுப்பது மிகவும் விசேஷமானதாகும். முடிந்தவர்கள் உபவாசமாகவும், முடியாதவர்கள் பால், பழம் அல்லது ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்.
முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பருப்பு பாயசம் ஆகியவை படைக்கலாம். முடியாதவர்கள் எளிமையாக சர்க்கரை கலந்த பால் படைத்து வழிபடலாம்.
முருகனின் அருளை பெற சொல்ல வேண்டிய மந்திரம்
மாலையில் வீட்டில் முருகன் படத்திற்கு முன் நெய் விளக்கேற்றி, முருகனுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், வேல் மாறல் போன்ற பதிகங்களை படிக்கலாம்.
பிறகு முருகனுக்கு நைவேத்தியமாக படைத்த பொருட்களை பிரசாதமாக சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். வைகாசி விசாகத்தன்று கோடை காலத்தில் குளிர்ச்சியை தரக் கூடிய நீர், மோர், பானகம், குடை, விசிறி, செருப்பு போன்ற பொருட்களை தானமாக வழங்கலாம்.
அன்றைய தினம் மற்றவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் முருகனின் மனதை குளிரச் செய்யும்.