(IPL 2025 Mega Auction) தொடங்கி பல்வேறு விஷயங்கள் தினந்தினம் பேசப்பட்டு வருகிறது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகள் உள்ளிட்டவை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில், அதுகுறித்த அறிவிப்புக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.
இன்னும் அணிகள் யார் யாரை தக்கவைக்கின்றன, விடுவிக்கின்றன உள்ளிட்ட விவரங்கள் தெரியாதபோதே சமூக வலைதளங்களில் ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் பல்வேறு கணிப்புகளை வாரி வழங்கி வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று வரும் 2025 சீசனிலும் (IPL 2025) மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) கப் அடிக்கும் வாய்ப்பு மிக குறைவாக உள்ளது என்பதுதான். அதாவது, மும்பை அணி வரும் சீசனில் யாரை தக்கவைத்து, யாரை விடுவித்தாலும் சரி, மெகா ஏலத்தில் யாரை எடுத்தாலும் அந்த அணியால் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி 2013இல் ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையில்தான் முதன்முதலில் கோப்பையை வென்றது. அதன்பின் 2015, 2017, 2019, 2020 என மொத்தம் 5 ஐபிஎல் கோப்பைகளை முதலில் வென்ற அணி என்ற பெருமையை மும்பை வைத்திருந்தது. அனைத்தும் ரோஹித் தலைமையில்… அந்த வகையில், 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ரோஹித் தலைமையிலும், 2024இல் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தலைமையிலும் மும்பை இந்தியன்ஸ் விளயைாடினாலும் நான்கு சீசன்களாக கோப்பையை நெருங்க முடியவில்லை. அதிலும் 2022 மற்றும் 2024 சீசனில் மும்பை அணி கடைசி 10ஆவது இடத்தைதான் பிடித்தது.
கேப்டன்ஸி பிரச்னை
நிலைமை இப்படியிருக்க வரும் மெகா ஏலத்தால் கொஞ்சம் பலமாகக் காணப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தமாக சரிவடையும் வாய்ப்பும் உள்ளது. அதில் முக்கியமானது கேப்டன்ஸி மாற்றம். ரோஹித் சர்மா கையில் இருந்து பாண்டியாவுக்கு கேப்டன்ஸி உரிய முறையில் பரிமாற்றம் செய்யப்படவில்லை. அது ஒருபுறம் இருக்க தற்போது கேப்டன்ஸியை மாற்றும் முனைப்பில் மும்பை முகாம் உள்ளது என கூறப்படுகிறது. அதில் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) முதன்மையானவராக இருக்கிறார். எனவே, 2025 சீசனிலும் கேப்டன்ஸி ஒரு முடிவாக இல்லை எனலாம்.
யார் யாரை தக்கவைக்க?
மெகா ஏலம் வரும்போது மொத்த அணியும் உருமாற்றம் அடையும். ஆனால், அணியின் முக்கிய வீரர்கள் நீடிப்பார்கள். இந்த முறை ரோஹித், சூர்யா, ஹர்திக், பும்ரா என நான்கு இந்தியர்களை தக்கவைப்பது கடினம்தான் இதில் ஒருவரை எடுத்தாலும் மும்பைக்கு பிரச்னைதான். இதில் மூவரை ஏலத்திற்கு முன்னரும், யாராவது ஒருவரை RTM மூலமாகவும் மும்பை தக்கவைக்க யோசிக்கலாம். ஆனால், இதில் யார் ஒருவர் ஏலத்திற்கு வந்தாலும் அவர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என்பதால் இவர்கள் டிரேட் செய்யப்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது.
சிற் சில ஓட்டைகள்
இப்படியிருக்க அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆகிய சில பிரச்னைகளால் மும்பை இந்தியன்ஸ் இந்த முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இதுமட்டுமின்றி, தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. கேப்டன்ஸி பிரச்னை, வீரர்களை தக்கவைப்பதிலும் கோர் அணியை கட்டமைப்பதிலும் உள்ள சிக்கல்கள், குறைவான அனுபவ வீரர்கள், பயிற்சியாளர் மாற்றம் என பல காரணிகள் இணைந்து 2025 சீசனில் மும்பை அணிக்கு கோப்பையை வென்று தராது என பெரும்பாலும் பேசப்படுகிறது.