உற்பத்தித் துறையின் இலக்காக இந்தியாவை மாற்ற, இங்குள்ள வாய்ப்புகளை ஆய்வு செய்ய தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோதி நியூயார்க் நகரில், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து பேசினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மற்றும் இந்தியாவை உள்ளிடக்கிய குவாட் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நியூயார்க்கில் இந்த சந்திப்பை நிகழ்த்தினார் மோதி.
உலக நிறுவனங்களின் கவனத்தை இந்தியாவின் விநியோகச் சங்கிலியின் பக்கம் திருப்பவும், சீனாவுக்கு மாற்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்தியா சில காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தியா, செமிகண்டக்டர் உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளாக அதிக கவனம் செலுத்தி வந்தாலும், இந்த வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் சீனா, தைவானிடம் இருந்து மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இந்தியா உள்ளது.
செப்டம்பர் 23-ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மோதி கூகுளின் சுந்தர் பிச்சை, அடோபின் ஷாந்தனு நாராயண், ஐ.பி.எம்-இன் அரவிந்த் கிருஷ்ணா, என்.வி.ஐ.டி.ஐ.ஏ-வின் ஜென்சன் ஹவாங் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார்.
“இந்தியாவில் இந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து, உலகத்தின் தேவைக்காக மேம்படுத்த, வடிவமைக்க, உருவாக்க இயலும்,” என்று மோதி தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், நடைபெற்ற வட்டமேசை சந்திப்புக் கூட்டத்தில், “உலகப் பொருளாதாரம், மனித மேம்பாட்டைப் புரட்சிகரமாக மாற்றும் கண்டுபிடிப்புகளில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த இயலும்,” என்பது குறித்து பேசியதாக குறிப்பிட்டிருந்தது.
நியூயார்க்கில் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த மாநாட்டில் பிரதமர் மோதி, இந்திய-அமெரிக்கர்களை இந்தியாவின் ‘பிராண்ட் அம்பாசிடர்கள்’ என்று குறிப்பிட்டார். மேலும் உலக மேம்பாடு, உலக அமைதி, உலக காலநிலைக்கு எதிரான செயல்பாடு, உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் திறவுகோலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சீனாவை கண்டிக்கும் குவாட் உறுப்பு நாடுகள்
அரசியல் மதிப்பீட்டாளர்கள், இந்த அறிக்கை சீனாவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள செய்தி சீனாவிற்காகவே உருவாக்கப்பட்டது, என்கின்றனர். மேலும் இந்த அறிக்கையின் மொழிப் பயன்பாட்டில் உள்ள வீரியத்தையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
“தென்சீன கடல் பிராந்தியத்தில் நிலவும் நிகழ்வுகள் குறித்தே இந்த அறிக்கை குறிப்பிடுகிறது என்றாலும் கூட நேரடியாகச் சீனாவை அது மேற்கோள் காட்டவில்லை. ஆனால் இந்த அறிக்கை முன்பு எப்போதும் இல்லாததைக் காட்டிலும் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறது. ஏனென்றால் நான்கு குவாட் உறுப்பு நாடுகளும் இந்த பிராந்தியத்தில் சீனாவின் செயல்பாடு குறித்து அதிக கவலை அடைந்துள்ளன,” என்று வாஷிங்டனில் உள்ள வில்சன் சிந்தனைக் கூடத்தில் செயல்பட்டு வரும் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகெல்மான் கூறினார்.
இந்த குவாட் கூட்டமைப்பு இந்த பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை அதிகரிக்க இருப்பதாகவும், இயற்கை இடர்பார்டுகளைச் சமாளிக்கும் வகையிலான வலையமைப்பை உருவாக்கும் புதிய திட்டம் குறித்தும், கர்ப்பப்பைப் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்தும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.