“தங்கம் வென்றதால் கவலை நீங்கியது” – செஸ் ஒலிம்பியாட் குறித்து ‘தங்க மங்கை’ வைஷாலி!

“ஒலிம்பிக்கில் செஸ் இல்லையே என்ற கவலை இருந்தது; ஆனால் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்றது அந்த கவலையை நீக்கிவிட்டது” என செஸ் வீராங்கனை வைஷாலி தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றதில்லை. ஆனால் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா அந்தக் குறையை தீர்த்ததோடு, ஒரே நேரத்தில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தனர். இதன்பின் இந்திய அணியின் கோப்பை வென்ற கொண்டாட்டம் குறித்த வீடியோக்கள் கவனம் ஈர்த்தன.

தங்கம் வென்று அசத்திய இந்திய அணியினர் இன்று நாடு திரும்பினர். இதில் சென்னை விமான நிலையம் வந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, அவரது தங்கை வைஷாலி, ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டி அளித்த தங்க மங்கை வைஷாலி, “ஒலிம்பிக்கில் செஸ் இல்லையே என்ற கவலை இருந்தது. ஆனால், செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்றது அந்த கவலையை நீக்கிவிட்டது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும், “தங்கம் வெல்ல வேண்டும் என்ற உறுதிப்பாடுடன் விளையாடினோம்” என்றும், “இந்த முறை அழுத்தத்தை நன்றாக கையாண்டோம்” என்றும் வைஷாலி போட்டி குறித்து பேசினார்.

இதற்கிடையே, கோப்பை வழங்கும் நிகழ்வின்போது மெஸ்ஸி ஸ்டைலில் குகேஷ் கோப்பையை ஏந்தி வந்து கொண்டாடியது வைரலான நிலையில் அதற்கு ஐடியா கொடுத்ததே பிரக்ஞானந்தா தான் என்று வைஷாலி வெளிப்படுத்தினார்.