திருச்சி மாவட்டம் சமயபுரம் மாகாளிக்குடி அக்ரஹாரத்தைச் சேர்ந்த கஜேந்திரன், மசினி என்று பெயரிடப்பட்ட யானையை கடந்த 10 ஆண்டுகளாக பராமரித்து வந்தார். இந்த யானை தனது இரு தோழி யானைகளுடன் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு வரும். பிறகு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும்.
இந்நிலையில், நேற்றைய முன் தினம்கோபமடைந்து மதம்பிடித்து மசினி யானை, பாகன் கஜேந்திரனை தள்ளிவிட்டது. பின்னர், அவர் எழுந்து வந்து அங்குசத்தால் அதன் காலில் குத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது துதிக்கையால் கஜேந்திரனை காலுக்குள் இழுத்த மசினி யானை, அவரது மார்பில் காலால் மிதித்து தூக்கி வீசி அவரை மிதித்து எடுத்து, இதனால் அந்த பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பின்னர், அவரின் உடலை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக, அங்கும் இங்கும் தள்ளி விட்டு அந்த யானை, தனது தந்தத்தால் கஜேந்திரனின் உடலை குத்தி நிலைகுலைய செய்தது. இதனை தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் அனைவரும் மசினியின் தோழி யானைகள் உதவியுடன் அதனை அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர்.
அதன் பின்னர், சகஜ நிலைக்கு திரும்பிய மசினி யானை, தனது பாகனை கொன்றது தெரியாமல் அவரை இரவில் தேடியது. அப்போது அதன் கண்களில் கண்ணீர் வழிந்ததாகக் கூறப்படுகிறது. இரவு 9 மணியளவில் மசினி யானை மாகாளிக்குடி கொட்டகையில் அடைக்கப்பட்டது. கோயில் ஊழியர்கள் அதன் நடவடிக்கையை கண்காணித்தனர். யானை தனது பாகனை இரவில் தேடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.