காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்கு ஆண்வேடமிட்ட திருச்செந்தூரை சேர்ந்த பெண் ஒருவர், உண்மை அம்பலமானதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் யஸ்வந்தையா..! புதுச்சேரியில் தங்கி மகாமாத்மா காந்தி மருத்துவமனையில் ஸ்டோர் கீப்பராக பணி புரிந்து வந்தார்.
சம்பவத்தன்று மருத்துவமனைக்கு எதிரே அழகு நிலையம் நடத்திவந்த இளவரசி என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யஸ்வந்தையா தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய யஸ்வந்தையா சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தீயில் அவர் அணிந்திருந்த ஆடைகள் கருகியதால், யஸ்வந்தையா ஆண் வேடமிட்ட பெண் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து தீக்குளித்தது பெண் என மருத்துவமனையில் இருந்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த அழகு நிலைய பெண் இளவரசியோ தீக்குளித்தவர் தனது கணவர் யஸ்வந்தையா என்று குறிப்பிட்டு இருந்ததால் காவல்துறையினர் குழப்பம் அடைந்தனர்.
இளவரசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , ஒரு பெண் மீது கொண்ட காதலால் மற்றொரு பெண் ஆணாக வேடமிட்டு ஏமாற்றி மோசடி திருமணம் செய்தது தெரியவந்தது.
அழகு நிலையம் நடத்தி வந்த வடலூரை சேர்ந்த இளவரசி மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த யஸ்வந்தி என்ற பெண் தன்னை ஆணாக மாற்றி கொண்டுள்ளார். தன்னுடைய நீளமான முடியை, ஆண்களை போல கத்தரித்துக்கொண்டு… ஆண்கள் அணியும் உடைகளை அணிந்து கொண்டு… யஸ்வந்தையாவாக இளவரசியிடம் காதலை சொல்லி அவரை சம்மதிக்கவும் வைத்துள்ளார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு 3 மாதங்கள் ஒன்றாக குடித்தனம் நடத்தி உள்ளனர்.
அந்த 3 மாதங்களும் யஸ்வந்தையா, மனைவி இளவரசியுடன் தாம்பத்தியத்தை தவிர்த்து வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் அவர் எப்போதும் ஆண்கள் அணியும் உடையுடனேயே வலம் வந்துள்ளார். இதுவும் இளவரசிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு நாள் இளவரசி வெளியே செல்வது போல நடித்து வீட்டிற்குள் வந்து யஸ்வந்தையாவின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார். அப்போது தான் திருமணம் செய்து கொண்டிருக்கும் யஸ்வந்தையா ஆண் வேடமிட்ட பெண் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை வெளியில் சொன்னால் அவமானமாக இருக்கும் என்ற எண்ணத்தில் புகார் ஏதும் கொடுக்காமல் இளவரசி மறைத்துள்ளார் யஸ்வந்தையாவையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் .கடந்த 10 ந்தேதி தங்களது திருமண நாள் அன்று மீண்டும் வாழ்க்கையை தொடங்கலாம் என்று யஸ்வந்தையா அழைத்ததாகவும், இளவரசி செல்ல மறுத்ததால் யஸ்வந்தையா தீக்குளித்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாக இருக்கலாம் ஆனால் இயற்கைக்கு முரணான காதல் என்ன மாதிரியான விபரீதத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு யஸ்வந்தி என்ற பெண்ணாக இருந்து இளவரசி என்ற பெண்ணை திருமணம் செய்த யஸ்வந்தையாவின் சோக முடிவே சான்று.