துபாய் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவந்த இலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் உட்பட ஆறு பேர் இலங்கை வந்திருந்தனர்.
துபாயில் இருந்து வந்தவர்கள் அம்மா, அம்மா என்று அழுதபடி இலங்கை பெண்ணின் சவப்பெட்டி தோளில் சுமந்து சென்ற காட்சி அனைவரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
இந்த சம்பவம் ஜா-எல கப்புவத்தை பகுதியில் நடந்துள்ளது.
கப்புவத்தை பிரதேசத்தை சேர்ந்த சாந்தி பெரேரா என்ற இந்த பெண் நான்கு பிள்ளைகளை பராமரிக்கும் சேவைக்காக கடந்த 1981 ஆம் ஆண்டு துபாய் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் மேலும் நான்கு பிள்ளைகள் என எட்டு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பு சாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.சாந்தி திருமணமாகாதவர். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சாந்தி நல்ல முறையில் நிறைவேற்றி வந்துள்ளார். 38 ஆண்டுகளாக சாந்தி, துபாய் நாட்டில் ஒரே வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு சாந்திக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
துபாய் வீட்டின் உரிமையாளர்கள் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்காது அங்கு வைத்தே சிகிச்சையளித்து வந்துள்ளனர். சாந்தி சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அவரது சகோதரர் துபாய் வந்து செல்ல பயண ஏற்பாடுகளையும் அவர்கள் இலவசமாகசெய்து கொடுத்துள்ளனர்.எவ்வளவு சிகிச்சை செய்தும் சாந்தியின் உடல் நிலை தேறாத காரணத்தினால், அவரை பராமரிக்க இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரை வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர்.
உடல் நிலை குணமாகாத காரணத்தில் சாந்தியின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு வர வேண்டும் என்ற உறுதிமொழியுடன் சாந்தியை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இலங்கைக்கு அழைத்து வந்து சாந்தியின் சகோதரரிடம் ஒப்படைத்த துபாய் நாட்டில் சாந்தி, தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர்கள் குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து விட்டு திரும்பிச் சென்றுள்ளனர்.சாந்திக்கு அவரது சகோதரர் முடிந்த அனைத்து சிகிச்சைகளையும் செய்துள்ளார். எனினும் நாளுக்கு நாள் உடல் மோசமடைந்து வந்ததுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சாந்தி இறக்கும் வரை வருடந்தோறும் துபாய் நாட்டில் இருந்து வந்து சாந்தியை பார்த்து விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், அண்மையில் சாந்தி இறந்த செய்தி கிடைத்ததும் சாந்தி வளர்த்த பிள்ளைகள் மற்றும் வீட்டின் உரிமையாளர் என 6 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் சாந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தவாறு அம்மா, அம்மா என அழுது புலம்பியுள்ளனர். சாந்தியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், புதைகுழிக்கு அருகில் 6 பேரும் தம்மை வளர்த்த வளர்ப்பு தாயின் ஆத்மா சாந்தியடைய குர் ஆனை ஓதியுள்ளனர்.
பெற்றோரை வீதியில் விட்டுச் செல்லும் பிள்ளைகள் உள்ள நாட்டில் தம்மை வளர்த்த பிற இனத்து பெண்ணுக்கு துபாய் நாட்டில் இருந்து வந்து மனமுறுகி இறுதி அஞ்சலியை செலுத்தியது சம்பவம் அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளது.