அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடி ஆலோசித்த அமைச்சர்கள் அறிவித்ததை அடுத்து அதிமுக அணி பிளவு பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், டிடிவி தினகரன் அணிக்கும் மோதல் உருவாகலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம் ஆகிய இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒரு குடும்பத்திடம் இருந்து கட்சி ஆட்சியை காப்பாற்றுவோம். தினகரன் குடும்பத்தை ஒதுக்கி விட்டு கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும். என்றார். மேலும், டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
டிடிவி தினகரன் அணி
இதனை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது வீட்டிற்கு சென்ற எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ் செல்வன், கதிர்காமு உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிமுக அம்மா அணி இரண்டாக பிளவு பட்டதை அடுத்து அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் கூட்டம்
இதன் காரணமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு டி.டி.வி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்
ஆளுநர் உத்தரவு
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால், சென்னையில் அனைத்து காவலர்களும் காலை 6 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனை ஏற்று காவலர்கள் அனைவரும் பணிக்கு வந்துள்ளனர்.
போலீஸ் குவிப்பு
கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி அணியினரும், டிடிவி தினகரன் அணியினரும் வருவார்கள் என்பதால் இரு அணிக்கும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் உருவாகியுள்ளது. இதனையடுத்து தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம்
இதே போல ஜெயலலிதா நினைவிடத்திற்கு இரு அணியினரும் வரக்கூடும் என்பதை அடுத்து மெரீனா கடற்கரை சாலையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக மீண்டும் பிளவுபட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. கட்சியில் பிளவு, ஆட்சிக்கு சிக்கல் என அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் அதிமுக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.