டெல்லி : விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 37 நாட்களாக தமிழக விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடத்திய பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அடிப்படையில் 2 நாட்களுக்கு போராட்டத்தை ஒத்திவைப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லையெனில் போராட்டம் மீண்டும் தொடரும் எனவும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
முன்னதாக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஒன்றரை மாதங்களாக நாள்தோறும் வித்தியாசமான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்தனர். எலிக்கறி, பாம்புக் கறி தின்றது, பாதி தலை மொட்டையடித்தது, சேலை அணிந்து ஊர்வலம், புல் திண்ணுதல், பெண்கள் வேடமணிந்த விவசாயிகள் வளையல் உடைத்தும் நெற்றியில் அணிந்த குங்குமத்தை அழித்தும், சட்டையை கிழித்துக்கொண்டு சாலையில் திரிவதுபோல் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து சந்திக்கும் வரை, இம்மாதிரியான போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை, விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்து. இந்நிலையில் போராட்டத்தை தொடரலாமா அல்லது வேண்டாமா என அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஆலோசனைக்கு பிறகு விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக 2 நாட்களுக்கு வாபஸ் பெறப்படுவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.