திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கடை வீதியில் உள்ள ஜவுளிக் கடைக்கு, நேற்று ஒரு கார் வந்தது. அந்தக் காரில், 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இருந்தனர்.
பின், காரில் வந்தவர்கள், ஜவுளிக் கடைக்குள் நுழைந்து, பெண்கள் பகுதிக்குச் சென்று, பட்டுப் புடவைகள் உட்பட பல புடவைகளை, எடுத்துக் காட்டச் சொன்னார்கள்.
எல்லாவற்றையும் பார்த்து விட்டு, “எதுவும் பிடிக்கவில்லை” என்று சொல்லி விட்டு, சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, துணிகளை மடித்து வைத்து எண்ணிப் பார்த்த கடை ஊழியர்களுக்கு அதிர்ச்சி்….!
அவற்றில் 5 சேலைகளும், 12 ஜாக்கெட் பிட்டுகளும் குறைந்தது தெரிய வந்தது. உடனே கடை ஊழியர்கள், காரில் வந்தவர்களைத் தேடி வெளியே வந்தனர்.
கடை ஊழியர்கள் தங்களைத் தேடுவதை அறிந்த நான்கு பேர், தப்பி ஓடி விட்டனர். கார் டிரைவர் மட்டும், காரை ஸ்டார்ட் பண்ண முயற்சி செய்து கொண்டிருந்தார்.
கடை ஊழியர்கள் அவரைப் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
காவல் நிலையத்தில், அந்த டிரைவரை விசாரித்த போது, அவரது குரல் பெண் போன்று இருந்ததால், சந்தேகம் அடைந்த போலீசார், பெண் போலீசாரை வைத்து, அவரை ஆய்வு செய்தனர்.
அவர் ஆண் வேடமிட்ட பெண் என்பது தெரிய வந்தது. அவருடன் வந்தவர்கள், அந்தப் பெண்ணின் கணவர் முருகேசன் மற்றும் உறவினர்கள், என்று, அந்தப் பெண் கூறினார்.
போலீசார் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவர் கூறிய விபரங்களை வைத்து, தப்பிச் சென்ற அவரது கணவரையும், மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.