கிரேக்கத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிரிழந்த 6 மாதக் குழந்தைக்காக, அக்குழந்தையின் தாய் எழுதிய உருக்கமான கடிதம், அனைவரது கண்களையும் குளமாக்கியுள்ளது.
கோடை விடுமுறையை கழிப்பதற்காய் சென்றிருந்த தம்பதியினரின் 6 மாதக் குழந்தை, கிரேக்கத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியது. குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் ஓடும்போது, கடலில் விழுந்து உயிரிழந்தது.
இந்நிலையில், குறித்த குழந்தையின் ஞாபகார்த்தமாக கிரேக்கத்தின் கடற்கரையில் மனதை உருக்கும் கடிதமொன்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
”என் அன்பே, என் குழந்தையே.. நீ சிறந்த நீச்சல்காரன். நீ நீந்தும்போது அதனை பார்த்து சிரிக்கும் உன் அம்மாவை நீ கவர முயற்சித்தாய். அதனை உன் தந்தையும் கண்டு பெருமிதம் கொள்ள வேண்டுமென நினைத்தாய். இனிவரும் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நாம் இங்கு வருவோம். உன்னோடு சேர்ந்து நீந்தி ஆனந்தம் கொள்வோம். உன்னோடு நீரில் விளையாடுவோம் நீ மீண்டும் எம்மிடம் வரும்வரை..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தை பார்க்கும் அனைவரும் கண்கலங்கிச் செல்கின்றனர்.
கிரேக்கத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் இதுவரை 88 பேர் உயிரிழந்ததோடு, நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த பேரழிவை கையாள்வதில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.