அரசியல் ரீதியில் வெறுக்கப்படுபவரா! தமிழ் ரீதியில் வியக்கப்படுபவரா கருணாநிதி!!

தமிழகம் இன்று பரபரப்பின் மத்தியில் சுழன்று கொண்டிருக்கின்றது. தமிழகம் மாத்திரம் என்று சொல்லிவிட முடியாது, ஈழத்தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும் கூட ஏதோ ஒன்று எம்மை விட்டு செல்ல போகின்றது போன்ற ஓர் உணர்வு.

அரசியல் சாணக்கியன், தீவிர தமிழ் பற்றாளர், அவ்வளவாய் தமிழ் மீது நாட்டம் இல்லாதவர்களைக் கூட தனது தமிழ் பற்றால் சுண்டி இழுக்கும் வல்லமை பொருந்திய மாமேதை கலைஞர் மு.கருணாநிதி என்றே சொல்லலாம்.

தற்போது தனது 95ஆவது வயதினில் தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வயது 90 ஐத் தாண்டினாலும், தனது தனி வல்லமையால் தனக்கு நிகர் தானே என இத்தனை நாள் ஒரு சிங்கத்தின் தோரணையில் வலம் வந்த அவர் இன்று கடும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருப்பது அவரின் தீவிர தொண்டர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது வீட்டைச் சுற்றியும், மருத்துவமனையைச் சுற்றியும் ஏராளமான தொண்டர்கள் காத்துகொண்டிருக்கின்றனர் ஏதோ ஓர் செய்திக்காக, தன்னிகரில்லா தம் தலைவன் மரணத்தை வென்ற மாவீரனாய் மீண்டும் திரும்புவாரா என்ற எதிர்ப்பார்ப்பில் ஒரு சாரார் இருக்க, மீண்டும் எமனுக்கு சிறிது விளையாட்டுக் காட்டிவிட்டு, காலனுக்கு குட்பாய் சொல்லி தன் இருப்பிடம் நோக்கி விரைந்து வர வேண்டும் என கடவுளிடம் மனுக்கொடுத்துவிட்டு ஒரு சாரார் காத்திருக்கின்றனர்.

எனினும், தனது மனோவலிமையால் இயற்கையை எதிர்த்து போராடும் கருணாநிதி மருத்துவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். அவரது மனோதிடம் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

உண்மையில் யார் இந்த கருணாநிதி! சிலர் கர்ப்பக்கிரகத்தில் குடியிருக்கும் தெய்வமாய் கருணாநிதியை பார்க்கின்றனர், சிலர் தமிழ் ஆளுமை கொண்ட தலைவனாய் பார்க்கின்றனர், சிலர் மனதால் வெறுக்கும் ஒரு அரசியல்வாதியாகவும் அரசியல் சாணாக்கியனாகவும் கலைஞர் கருணாநிதியைப் பார்க்கின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி ஐந்து தடவைகள் தமிழக முதலமைச்சராக பதவி வகித்து சாதனை படைத்துள்ளார். தீவிர நாத்திகரான கருணாநிதி, தனது எழுத்து, மற்றும் பேச்சு மூலம் நாத்திக கொள்கைகள் மேல் தட்டு மக்கள் முதல் கீழ் தட்டு மக்கள் வரை சென்றடைய காரணமாக இருந்தவர்களின் முக்கியமானவர்.

அது மாத்திரமல்லாது, மேடை நாடகம், திரைப்படங்களிலும் தனது கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கைகளை தீவிரமாக பரப்பினார். நாடகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகில் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, உரையாடல்களை எழுதிய கலைஞன் என்பதால், கருணாநிதி கலைஞர் என அழைக்கப்பட்டார்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய மத்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல்வாதியாகவும் அரசியல் சாணாக்கியமிக்க தலைவராகவும் கருணாநிதி பார்க்கப்படுகின்றார்.

கருணாநிதிக்கு அரசியல் முழுமையான பணி என்றாலும் தமிழ்த் திரையுலகிலும்கூட தனக்கென தனித் தடத்தை பதித்தவர். தமிழ் மீது பற்று இன்றி இருந்தவர்களை கூட கலைஞர் தனது திரைப்பட வசனங்களின் மூலம் தமிழ் மீது ஆர்வமிக்கவர்களாகவும் தமிழ் பற்றாளர்களாகவும் மாற்றினார் என்றால் அது மிகையாகாது.

ஒரு திரைக்கதை, வசன எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட கருணாநிதி, நாடகத்துறையிலும் கூட தனக்கென ஓர் அத்தியாயத்தைப் படைத்தது போல் தமிழ் திரையுலகிலும் தனக்கென பாணியை வகுத்துக்கொண்டார். இவரது தமிழ்ப்புலமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பராசக்தி திரைப்படம் தான்.

நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் ஓடினேன் ஓடினேன் சென்னையை நோக்கி ஓடினேன் என்ற நகைச்சுவை வரிகள், முதலில் என் வயது ஒத்தவர்களுக்கு நகைச்சுவை வரிகளாகத்தான் அறிமுகமானது, அதன் பின்னர் அதன் உண்மை வரிகளை கவிஞர் கைவண்ணத்தில் பார்த்த பிறகுதான் அவரின் தமிழுக்கு அடிமையாகினோம் என்றுகூட கூறலாம்.

கருணாநிதியின் வசன ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்திய படம் பராசக்தி. அவரது அதிரடி வசன நடை மாத்திரம் அல்ல அவரது நகைச்சுவை உணர்வும் கூட ரசிக்கத்தக்கவை அத்துடன் சிந்திக்கத்தக்கவை. கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் பகுத்தறிவு கொள்கைகளும்,அரசியலும் கலந்திருக்கும்.

நகைச்சுவை கலந்த உடனடி பதிலடியை சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கடைப்பிடித்தவர் கலைஞர் மு. கருணாநிதி. தமிழின் அழகை, வீச்சை, ஆளுமையைத் திரை உரையாடல்களால் வெளிப்படுத்தியவர்களில் முதன்மை இடம் அவருக்கே உரியது.

ஓடினாள், ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்., என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது என, பாமரர்கள் ரசிக்கும் சினிமாவில் இலக்கிய நயத்துடன் வசனம் எழுதி, படம் பார்க்கிறவர்களும் அதைத் திரும்பத் திரும்பப் பேசி ரசிக்கும் வகையில் தன் தனித் தமிழ் நடையால் வெற்றி பெற்றவர் கலைஞர்.

கதாபாத்திரங்களின் பெயரிலிருந்து அவை பேசும் வசனங்கள் வரை அனைத்திலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியவர் கலைஞர். அதனால்தான், கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது என்ற வசனமும், அடேய் பூசாரி.. அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்? என்ற கேள்வியும் ஆண்டுகள் பல கடந்தபிறகும் உயிரோட்டத்துடன் உள்ளது.

மேலும், 2010ஆம் ஆண்டு, உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். உலகளாவிய ரீதியில் செம்மொழி பாடல் பிரசித்தமானது. அது மாத்திரமல்ல கருணாநிதி, திருக்குறளுக்கு உரை நடை எழுதியுள்ளார்.

அது மட்டுமா? உலக பொது மறையாம் திருக்குறளை தந்த வள்ளுவனுக்கும் 133 அடி உயரத்தில் சிலையை நிறுவினார். அந்த சிலை கன்னியாகுமரியின் கடலோரத்தில் கம்பீரமாய் இன்றும் காட்சி தருகிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே, அவர் தமிழுக்கு ஆற்றிய பங்கு ஏராளம். தமிழ் செம்மொழி என்ற கௌரவத்தை பெறவும் கருணாநிதியும் முக்கிய காரணம். பல போராட்டங்களின் பின்னர் தமிழ் செம்மொழியானது.

கருணாநிதியின் அரசியலை விரும்பாத பலர் அவரது மேடைப்பேச்சுக்களுக்கு தீவிர ரசிகனாய் இருந்தனர், மேடைப்பேச்சுக்களின்போது கலையை பற்றி பேசினாலும் அதில் அரசியல் நெடி இருக்கும். அவர் தனது பேச்சில் அழகு தமிழில் அரசியல்வாதிகள் பலரையும் விமர்சிப்பது சிறப்பு. கருணாநிதியின் அரசியல் எதிரிகள் கூட அவரது விமர்சனங்களை ரசிப்பதுண்டு.

ஆனால், இத்தனைப் புகழுக்கும், பெயருக்கும் சொந்தக்காரரான இந்த மூத்த அரசியல்வாதியான கருணாநிதியை அரசியல் ரீதியில் வெறுப்பவர்கள் பலர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதிலும், தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் பலர் அவரை கடுமையாக வெறுப்பதுடன் விமர்சித்தும் வருகின்றனர்.

ஈழத் தமிழர்களை காவுக்கொண்ட 30 வருட கொடூர யுத்தத்தின்போது அவரது செயல்கள் ஈழத்தமிழிர்கள் மத்தியில் மிகவும் வெறுப்பை மாத்திரமே விதைத்துள்ளன.

இலங்கைத் தமிழர் விடயத்தில் கருணாநிதி எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றி அவர்களை ஏமாற்றி, இலங்கை இராணுவத்தினரிடம் அவர்களை காட்டுக்கொடுத்துவிட்டார் என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல முறைகள் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழினப் பாதுகாவலர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு தமிழினப் படுகொலைக்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது “உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது’ என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது என்றுகூட அவர் சுட்டியிருந்தார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் கடும் நோய்த்தொற்றுக்கு உள்ளாக மருத்துவத் தேவைக்காக தமிழகத்தை நாடியபோது அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க மறுத்து பலரது வெறுப்பையும் ஒரு சேர சம்பாதித்துக்கொண்டார்.

கருணாநிதிக்கு மனிதாபிமானம் கூட முற்றிலும் மறைந்து போனதா என்று கூட விமர்சித்தனர். இதற்கு கருணாநிதியை மட்டுமே குற்றம் கூறி பயனில்லை. அதில் அரசியலும் கலந்திருக்கின்றது. ஒரு பிராந்திய வல்லரசின் மாநிலம், அந்த வல்லரசை மீறி செயற்பட முடியாத நிலைமையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. ஈழத்தமிழர் தொடர்பிலான இந்திய மத்திய அரசின் கொள்கைகளை ஒதுக்கி விட்டு செயற்பட முடியாத நிலைமை. இதற்கு கருணாநிதி மட்டும் விதிவிலக்கல்ல. எனினும் அதனையும் தாண்டி செயற்பட கூடிய அரசியல் பலம் கருணாநிதிக்கு இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

கலைஞர் கருணாநிதி ஆரம்ப காலகட்டங்களில் ஈழத்தமிழினத்திற்கு செய்தவைகள் ஏராளம். எனினும் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்ட போர் கலைஞர் கருணாநிதியையும் ஒரு பங்காளியாக சேர்ந்தது காலத்தின் கோலம். இதற்கு தவிர்க்க முடியாத கருணாநிதியின் குடும்பம் சார்ந்த நலன்களும் காரணமாக இருந்ததாக விமர்சிக்கப்படுகிறது.

இந்திய மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் பங்காளியாக இருந்தமையே இந்த பழிக்கு காரணம். இதனை மையமாகக் கொண்டு அரசியல் ரீதியில் அவரை வெறுத்தவர்கள் பலர்… ஆனால் கலைஞர் கருணாநிதியின் தமிழ், உலக தமிழர்களை அவருக்கு அடிமையாக்கியது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

 

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Jeslin அவர்களால் வழங்கப்பட்டு 30 Jul 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும்  யாழ்தீபம் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை.